Share via:
பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் லேபர் கட்சி 412 இடங்களில்
வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியதற்கு, அவர்கள் தி.மு.க. கொள்கையைப் பின்பற்றியது
தான் காரணம் என்று ஸ்டாலின் அறிவிப்பு செய்திருக்கிறார்.
பிரிட்டனில் கடந்த 14 ஆண்டுகளாக கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி
நடந்து வந்தது. இந்த காலகட்டத்தில் உட்கட்சி பூசல் காரணமாக போரிஸ் ஜான்சன், லிஸ்டிரஸ்
என பிரதமர்கள் மாறிக் கொண்டே இருந்தனர். கடைசியாக5-வது நபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றார்.
இந்நிலையில், மொத்தம் உள்ள650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று
முன்தினம் பொதுத் தேர்தல்நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது. இதில்,
எதிர்க்கட்சியான லேபர்கட்சி 418 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்
என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்தன
அதன்படியே தேர்தல் முடிவும் இருந்தது. லேபர் கட்சி பெரும்பான்மைக்கு
தேவையான 326 என்ற இலக்கை தாண்டி, 412 இடங்களுக்கு மேல்வெற்றி பெற்றுள்ளது. கன்சர்வேட்டிவ்
கட்சி 121 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் இதர கட்சிகள் வென்றன.
லேபர் கட்சியின் வெற்றியை தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கெய்ர்
ஸ்டார்மர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் ஆட்சியமைக்க மன்னர் சார்லஸ் உத்தரவிட்டுள்ளார்.
கெய்ர் ஸ்டார்மர், தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை
தொழிற்சாலைக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரித்தவர். தாய் செவிலியராக பணியாற்றியவர்.
லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கெய்ர் ஸ்டார்மர், மனித உரிமைகளை பாதுகாக்கும்
வழக்கறிஞராக பணியாற்றினார். கடந்த 2015-ல் லேபர் கட்சியில் இணைந்து எம்.பி.யானார்.
2020-ல் லேபர் கட்சியின் தலைவரானார்.
தேர்தல் வெற்றியை தொடர்ந்து, தனது ஆதரவாளர்கள் இடையே அவர் நேற்று
உரையாற்றினார். அப்போது அவர், “14 ஆண்டுகளுக்கு பிறகு, பிரிட்டனுக்கான புதிய அத்தியாயம்,
எதிர்காலம் தொடங்கியுள்ளது. பிரிட்டன் மக்களால் இந்த மாற்றம் சாத்தியமாகிஉள்ளது. கடந்த
5 ஆண்டுகளாக நாம் மேற்கொண்ட கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. மாற்றத்துக்கான பணியை
தொடங்குவோம். அரசியல் என்றாலே, அது பொது சேவை செய்வதற்கானதுஎன்ற நிலையை மீண்டும் உருவாக்குவோம்”
என்றார்.
இந்த நிலையில், தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், நான்
முதல்வன் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் ஆகிய மூன்றும் பிரிட்டன் தொழிலாளர் கட்சி
தேர்தல் அறிக்கையில் திட்டங்களாக அறிவித்து, பிரிட்டன் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப்
பெற்றுள்ளது. மேலும், இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டு மக்களிடமும், இந்தியாவின் இதர
மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருவதாகவும் தி.மு.க. அறிவிப்பு செய்திருக்கிறது.
அதேபோல் இங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள உமா குமரனுக்கு
நாம் தமிழர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், ‘’தூரத்தில் தெரியும்
சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது என்பதால் தங்கை
உமா குமரனின் வெற்றி உலகத்தமிழினத்தின் வெற்றியாகும். அவரைபோன்றே தொழிலாளர் கட்சியின்
சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை கிருஷ்ணி ரிசிகரன், தாராள சனநாயகவாதிகள் கட்சி சார்பில்
போட்டியிட்ட அன்புத்தம்பி ஜாகிர் ஹுசேன் ஆகியோர் இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தபோதிலும்,
அதற்காக எவ்வித தற்சோர்வும் அடைய வேண்டாம்; ‘தோல்வியே வெற்றியின் தாய்’ என்னும் முதுமொழிக்கேற்ப,
தொடர்ந்து மக்கள் பணியாற்றினால், எதிர்காலத்தில் உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள்’’ என்று
தெரிவித்துள்ளார்.
உமா குமரன் வெற்றிக்குக் காரணம் சீமானின் வழிகாட்டுதல் என்று நிச்சயம்
பொதுக்கூட்டத்தில் பேசுவார் என்று அவரது ஆதரவாளர்களே கூறிவருகிறார்கள். அதுசரி, இங்கிலாந்தில்
வென்ற இருவருக்கும் ஸ்டாலின், சீமானை தெரியுமா என்பது தான் கேள்வி.