உலகம் முழுக்க அதானியின் ஊழல் நாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், பா.ஜ.க.வினர் மட்டும், ‘ஸ்டான் வித் அதானி’ என்று ஒரு ஹேஸ்டேக்கை வைரலாக்கி வருகிறார்கள். அதாவது, இது அதானி மீதான தாக்குதல் இல்லையாம், இந்திய தொழிலதிபர் மீது தாக்குதல் ஆகவே, இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க.வினர், ‘’ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரை தமிழ்நாடு, சட்டிஸ்கர், ஆந்திரா,ஒடிஸா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் மின்சார கொள்முதலில் அந்தந்த மாநில அரசுகளோடு செய்து கொண்ட ஒப்பந்தங்களில் ஊழல் நடந்துள்ளது என்று அதானி நிறுவனம் மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்று குற்றம் சாட்டியுள்ள நிலையில் அந்த நேரத்தில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த, இப்போதும் தொடர்கின்ற தி.மு.க. அரசு இதனை ஒப்புக்கொள்கிறதா?’’ என்று ஊழலை தமிழகத்தின் பக்கம் திருப்புகிறார்கள்.

மேலும், ‘’இரு இந்திய தொழிலதிபர் உலகின் மிகப்பெரும் தொழிலதிபராக மாறுவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகிறார்கள். இது, இந்தியர்களுக்கு ஏற்பட்ட அவமானம். ஆகவே, இப்போது எல்லோரும் அதானிக்கு ஆதரவாக நிற்க வேண்டும்’’ என்று அழைப்பு விடுக்கிறார்கள்.  

அதேநேரம் அரசியல் விமர்சகர்கள், ‘’அதானி, தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் செய்த பல்லாயிரக்கணக்கான கோடி நிலக்கரி இறக்குமதி ஊழலில் அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று அமெரிக்கா வரை இந்தியாவின் மானம் விமானம் ஏறி இருக்குமா? தேர்தல் பிரச்சாரத்திற்கு அதானி விமானத்தில் ஏறி போஸ் கொடுப்பது, பிரதமராக வெளிநாட்டு பயணம் போகும் போது அதானியை கூடவே கூட்டிட்டு போய் வேலை வாங்கி கொடுப்பது என்று பிரதமர் மோடி செய்த துரோகத்தால் இன்று இந்தியாவே தலைகுனிந்து நிற்கிறது. ஆனால் இன்னும் கூட அதானி ஊழலுக்கு எதிராக மோடி ஒரு வார்த்தை பேசவில்லை. 3 முறை பிரதமராக வாக்களித்த மக்களுக்கு இதை விட பெரிய துரோகத்தை செய்ய முடியாது’’ என்று கொதிக்கிறார்கள்.

ஒரு தொழிலதிபருக்கு மோடி அடிமையாக இருப்பது இந்தியாவுக்கு பெருத்த அவமானம். ஊழல் மீது நடவடிக்கை எடுக்க முடியாத ஒருவர் பிரதமராகத் தொடர ஏதேனும் தகுதி இருக்கிறதா?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link