Share via:
சாம்சங் நிறுவனத்தில் 30 நாட்களைக் கடந்து போராட்டம் நடந்துவருகிறது. சங்கம் வைத்துக்கொள்வதற்கு சாம்சங் நிறுவனம் அனுமதி கொடுத்தாலும், அங்கு சி.ஐ.டியு. சங்கம் அமையக்கூடாது என்பதிலும் அதில் வெளிநபர்கள் நுழையக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறது. இதற்கு தி.மு.க. அரசும் துணை நிற்பது தான் தொழிலாளர்களை கொதிநிலைக்குக் கொண்டுபோயிருக்கிறது.
அவசரம் அவசரமாக சில ஆதரவாளர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் முடிந்துவிட்டது என்று தி.மு.க. அமைச்சர்கள் அறிவித்ததுடன் நில்லாமல், எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்களை கைது செய்து, சாம்சங் முன்னேற்றக் கழகமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது ஸ்டாலின் அரசு. அந்நிய முதலீடுகளை அள்ளிக்கொண்டுவரும் நேரத்தில் இது போன்ற போராட்டங்கள் அந்த நிறுவனங்களை திரும்பிச் செல்ல வைத்துவிடும். மேலும் இதுவரை சங்கம் வைக்காத நிறுவனங்களும் போராடத் தொடங்கும் என்ற அச்சத்தினாலே தி.மு.க. இந்த விஷயத்தில் நிறுவனத்தின் பக்கம் உறுதியாக நிற்கிறது.
இதற்காக இப்போது இந்த போராட்டதை நீர்த்துப் போகச் செய்வதற்கான வழிகளில் தி.மு.க. இறங்கியுள்ளது. அதாவது, தொழிலாளர்கள் ஏழு மணி நேர ஷிப்ட் மட்டுமே வேலை செய்வார்கள். ஏசி பஸ் வேண்டும் என கேட்கிறார்கள், கல்யாணம் காதுகுத்துக்கு மொய் வைக்கணும்னு ரொம்ப அநியாயமாக கோரிக்கை வைக்கிறார்கள் என்று பொய் செய்தி பரப்புகிறார்கள். அது மட்டுமின்றி, சி.ஐ.டியு. கால் வைச்ச இடமெல்லாம் மண்ணாப் போயிடுச்சு. இந்த நிறுவனத்தையும் இழுத்து மூடிட்டுப் போயிடுவாங்க என்று கூறிவருகிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்காத ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தி.மு.க. அரசு ஆதரவு கொடுக்கலாமா? நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்ட 625 சாம்சங் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யலாமா? சட்டப்படி போராட்டத்தை தொடரலாம் என்று உயர் நீதிமன்றம் சொன்ன பிறகும் திமுக முதலாளிகளுக்கு ஆதரவாக நிற்கலாமா என்று கம்யூனிஸ்ட்கள் கேள்வி கேட்கிறார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தால் இந்த நேரம் ஸ்டாலினை கையில் பிடித்திருக்க முடியாது. ஆளும் கட்சியாயிற்றே அப்படித்தான் அமைதியாக இருப்பார்.