News

ஒரு உறைக்குள் மூன்று துப்பாக்கி..? விஜய்க்கு சொந்தமாக முடிவு எடுக்கத் தெரியாதா..?

Follow Us

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72ம் ஆண்டு பிறந்த நாளுக்கு பிரதமர் மோடியில் இருந்து விஜய் வரையிலும் வாழ்த்துகள் தெரிவித்துவருகிறார்கள். பிறந்த நாளையொட்டி பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு மாலை அணுவித்துவிட்டு பேசிய ஸ்டாலின், ‘’மாநிலத்திற்கு சுயாட்சி வேண்டும், இந்தித் திணிப்பு நிறுத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

அதோடு, 1971-இல் கோவையில் நடைபெற்ற தி.மு.கழக மாணவர் மாநாட்டில் 18 வயது இளைஞனாக இந்தித் திணிப்புக்கு எதிராக முழங்கிய அதேவேகத்துடன் சூளுரைக்கிறேன்… ஆதிக்க மொழித் திணிப்பைத் தடுத்து, அன்னைத் தமிழைக் காப்பேன்! தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவேன் என்றும் பதிவு போட்டிருக்கிறார்.

இந்த நிலையில் 1971 இந்தித் திணிப்பு போராட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்றது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தெளிவாக விளக்கமாக ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ’’1971ஆம் ஆண்டு செப்­டம்­பர் 25, 26 தேதிகளில் கோவை­யில் நடைபெற்ற தி.மு.கழக மாண­வர் மாநாட்டில் பேசியபோது “ இன்றைக்கு இந்தி திணிக்கப்­ப­டு­கின்ற முயற்சி தலை­காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றது. நம்முடைய மாண­வர் பட்­டா­ளம் அதனை எதிர்­கொள்­ளத் தயா­ராக இருக்க வேண்­டும். எந்தப் போராட்­ட­மாக இருந்­தா­லும், எப்படிப்பட்ட தியா­க­மாக இருந்­தா­லும் நம்­மு­டைய மாண­வர் பட்­டா­ளம் அதிலே கலந்­து­கொள்ள வேண்­டும் என்று மாநாட்­டுத் தலை­வர் அவர்கள் அழைப்பு விடுத்­தார்.

அப்­ப­டிப்­பட்ட மாண­வர் பட்டாளத்­தில் என்­னை­யும் இணைத்­துக் கொள்­கிற வாய்ப்பை நீங்­கள் உரு­வாக்­கித் தர­வேண்­டும். அது எந்­தத் தியாகத்­தின் பட்டிய­லாக இருந்­தா­லும் அதிலே என்னையும் சேர்த்­துக்­கொள்­வ­தற்கு ஆணையிட வேண்­டும். மொழிக்­காக, நம்­மு­டைய இனத்­திற்­கா­கப் போரா­டு­கி­றோம். போரா­டு­கிற இந்த நேரத்தில், நம்­மு­டைய உயிரை இழக்­கின்ற தியாகத்­தைச் செய்­வ­தற்­குக்கூட காத்திருக்கி­றோம். என்­னு­டைய தந்­தைக்கு நான்கு ஆண் பிள்­ளை­கள் இருக்­கி­றார்­கள். எனவே அந்த நான்கு ஆண் பிள்­ளை­க­ளில் ஒரு ஆண் பிள்ளை போய்­வி­டு­வ­தால் என்னுடைய தந்தை நிச்­ச­யம் கவ­லைப்­பட மாட்­டார். அது­வும் மொழிக்­காக, ஒரு இனத்திற்­காக, தன­யனை இழந்த தந்தை என்று என்­னு­டைய தந்­தைக்கு பாராட்டு கிடைக்­கும். அத்­த­கைய பாராட்டை, பெரு­மையை வாங்கித் தந்த மகிழ்ச்­சி­யும் என்­னைச் சேருமல்­லவா? என­வே­தான் நான் சொல்கிறேன். எத்­த­கைய தியா­கத்­தைச் செய்­வ­தற்­கும் தயார்.. தயார்..” என்று முழங்கியவர்தான் அண்ணன் தளபதி.

அவர் ஐந்து மாத குழந்தையாக இருந்தபோது முத்தமிழறிஞர் கலைஞர் திருச்சி சிறையில் இருந்தார். கைக்குழந்தையாகத் தூக்கிக் கொண்டுதான் தயாளு அம்மாள் அவரைக் கொண்டு போய் திருச்சி சிறையில் இருந்த கலைஞருக்குக் காட்டினார்கள். 12 வயது பையனாக இருந்தபோது மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தேசப் பாதுகாப்புச் சட்டப்படி கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டார். அவர் கல்லூரிப் படிப்பை முடித்ததும் மிசாவில் கைதானார். இப்படி போராட்டங்களுக்கிடையில் செதுக்கப்பட்டதே அவரது வாழ்க்கை. அரசியல் வாழ்வில் சிறை செல்வது இயல்புதானே எனச் சிலர் நினைக்கலாம் .அவர் இருந்தது அவசரகாலக் கொடுஞ் சிறை. அங்கு அவர் சந்தித்த அடக்குமுறை எத்தகையது என்பதை இன்றைய தலைமுறையினர் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

அதைப்பற்றி அவரே கூறிய செய்திகள் இவை : “இந்த இரவில் நான் மூன்றாவது ‘செல்’லுக்கு மாற்றப்பட்டிருந்தேன். அங்கே அன்றிரவு நான், ஆற்காட்டார், சிட்டிபாபு, நீல.நாராயணன், வி.எஸ்.கோவிந்தன் என ஐந்து பேர் இருந்தோம். ஐந்தாவது செல்…நாலாவது செல் என ஒவ்வொன்றாக முடிந்து அடுத்து எங்கள் செல்லின் அந்த இரும்புக் கதவு திறந்தது. “வாங்கடா வெளீல…”என்று பெருங்குரல் வந்தது!

அண்ணன் சிட்டி பாபு எதையும் வேகத்துடன் எதிர்த்து நிற்பவர். அவரே முன்னால் சென்றார். “வாடா, நீ தான் சிட்டிபாபுவா?” என்று அவர் கன்னத்தில் இறங்கியது அடி! தொடர்ந்து இதே மாதிரி பளீரென்று இறங்கின லத்தி அடிகள்.. ஆற்காட்டாருக்கும் அதே வரவேற்புதான். “நீதாண் வீராசாமியாடா?” என்று அவரை அடித்த அடிகளில் அவர் நெடுமரம்போல அப்படியே சாய்ந்து விட்டார். “வாடா வா! நீதான் ஸ்டாலினா? நீதான் கருணாநிதியோட பையனா?” என்று கண்களில் கொலை வெறியுடன் கேட்டபடியே ஒருவன் என் கன்னத்தில் இடி மாதிரி ஒரு அறைவிட, எனக்கு அப்படியே பார்வையே தட்டாமாலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. அடுத்தது லத்தியால் முழங்கையில் விழுந்தது முதல் அடி.. அவ்வளவுதான்! ‘ஐயோ..’ என்று நான் சுருண்டு முழங்கையைப் பிடித்தபடியே அப்படியே நினைவு இழந்து விழுந்துவிட்டேன்.

அப்புறம் எத்தனை அடிகள் விழுந்ததோ தெரியவில்லை. அப்புறம் அறையில் வைத்து எங்களைப் பூட்டின பின் என் செல் தோழர்கள் தண்ணீர் தெளித்து என்னை எழுப்பிய பின்புதான் நான் விழித்தேன். வாங்கிய அடியில் ஆளுக்கொரு பக்கம் உடம்பைப் பிடித்து முக்கி முனகியபடி இருந்தார்கள் அனைவரும்! அதிலும் சிட்டிபாபு அண்ணன், சுருண்டு மயக்கமாகி விழுந்து விட்ட என்மேல் அடிகள் எதுவும் விழக்கூடாது என்று என்மேலே குறுக்கே படுத்து அந்த அடிகளை முழுசாகத் தன்மேல் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.

என் முகத்தை நசுக்க வந்த பூட்ஸ் காலைத் தன் உடம்பில் ஏந்தியிருக்கிறார். என்னை அடிக்க வந்தவர்கள் பூட்ஸால் நசுக்கி ஆத்திரத்தில் அவர்மேல் ஏறி மிதித்ததில், அவருடைய கல்லீரல் ரொம்ப பாதிப்படைந்து விட்டது (இந்த மரண அடிகளே அவருக்கு வினையாக முடிந்து அவர் இன்னுயிரை சிறையிலேயே பறித்துக் கொண்டது) அப்புறம் அங்கே நினைவற்று விழுந்து கிடந்த சிட்டிபாபு அண்ணனைத் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டோம்! அந்த இடமே சுடுகாட்டின் மௌனத்தைவிட மோசமாக இருந்தது! என்ன பேசுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? எல்லோருக்குமே பிரமை பிடித்தது போல ஆகிவிட்டது.

“இப்படி மிசா கால சித்ரவதை என்னும் தீயில் புடம்போடப்பட்டவர்தான் அண்ணன் ’தளபதி’ அவர்கள். அண்ணன் தளபதி அவர்கள் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றபோது அந்தக் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து அவர் வழுவாமல் இருப்பாரா என்ற சந்தேகத்தைப் பலர் கிளப்பினர். அப்போது, ‘எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது” என ஆணித்தரமாக அவர் அறிவித்தது அவதூறு பரப்பியவர்களின் வாயை அடைத்தது. அதுமட்டுமின்றி “ மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கொண்ட வகையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அகில இந்திய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அனைத்து மாநிலக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். நிதி உரிமைகள் பறிக்கப்பட்டு, சிந்தனை உரிமைகள் பறிக்கப்பட்டு, செயல்படும் உரிமைகள் பறிக்கப்பட்டு, இன்றையதினம் மாநிலங்கள் அதிகாரமற்ற பகுதிகளாக சீர்குலைக்கப்படுவதைத் தடுத்தாக வேண்டும். அதற்கு இந்தியா முழுமைக்குமான அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயல்பட்டாக வேண்டும்” என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

அவையெல்லாம் பேச்சாக இல்லாமல் செயல்வடிவம் பெற்றுள்ளன. இந்தியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் பள்ளிக் கல்விக்கான நிதியைத் தரமாட்டோம் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்தோடு பேசியபோது அதற்குத் தமிழ்நாடு அரசு எப்படி எதிர்வினையாற்றப் போகிறது என எல்லோரும் எதிர்பார்த்தனர். போராட்டக் களத்தை விளையாட்டு மைதானமாகக் கருதி வளர்ந்த அண்ணன் தளபதி அவர்கள்

“ஐந்தாயிரம் கோடி அல்ல பத்தாயிரம் கோடி போனாலும் பரவாயில்லை, இந்தியை ஒருபோதும் ஏற்கமாட்டோம்” எனத் தமிழ்நாட்டு முதலமைச்சராக முழங்கினார். அத்துடன் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டங்களில் திமுக தொண்டர்களை இறக்கினார். மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டங்கள், இந்தி எழுத்து அழிப்புப் போராட்டங்கள் எனத் தமிழ்நாடு மீண்டும் சிலிர்த்தெழுந்திருக்கிறது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தோடு நிற்காமல் அதை மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் போராக அவர் விரிவுபடுத்தியிருக்கிறார்.

16ஆவது நிதிக்குழுவின் வரிப் பகிர்விலும், தொகுதி மறு சீரமைப்பிலும் தென்மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த இப்போது புதிய போர்க் களத்தை உருவாக்கியிருக்கிறார். மதத்தால், சாதியால் தமிழர்களைக் கூறுபடுத்த முயற்சிக்கும் சனாதனப் பிரிவினைவாதத்துக்கு எதிராக மாநில உரிமையெனும் ஜனநாயக முழக்கத்தின்மூலம் தமிழர்களை மட்டுமின்றித் திராவிட தேசம் என அழைக்கப்பட்ட தென்னிந்திய மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளார்’’ என்று பாராட்டியிருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link