Share via:

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமைப்பட்டுக் கொண்டார். ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்டிருக்கும் பாலியல் கொடூரம், ஸ்டாலின் ஆட்சியின் கையாலாகத்தனத்தைக் காட்டுகிறது.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமின்றி, அவரைப் பற்றிய அத்தனை தகவலும் அடங்கிய எஃப்.ஐ.ஆர். பொதுவெளியில் கசிந்திருப்பது அதை விட மிகப்பெரும் கொடுமை. இதுபோன்று வேறு யாரும் பாலியல் வன்முறை குறித்து வெளியே பேசக்கூடாது என்று மிரட்டுவது போன்று இந்த எஃப்.ஐ.ஆர். வெளி வந்திருப்பதாக சந்தேகப்படவே தோன்றுகிறது.
குற்றவாளி தி.மு.க. அமைச்சருக்கு நெருக்கமானவராக இருப்பது, அவர் சர்வசாதாரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைந்து வெளியேறுவது, அங்கு சிசிடிவி வேலை செய்யவில்லை என்பது எல்லாமே தற்செயல் நிகழ்வாகவே தெரியவில்லை. எஃப்.ஐ.ஆரில் எழுதப்பட்டிருக்கும், ‘அந்த சார் யார்?’ என்று எதிர்க்கட்சிகள் எழுப்பியிருக்கும் கேள்விக்கு இதுவரை ஸ்டாலின் பதில் சொல்லவே இல்லை.
மணிப்பூருக்கு பிரதமர் மோடி போகவில்லை என்று குற்றம் சாட்டும் ஸ்டாலின் இன்னமும் அண்ணா பல்கலைக்குப் போகவில்லை. அங்கு படிக்கும் மற்ற மாணவியருக்குப் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை. யாராவது தவறு செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்குவேன் என்று வசனம் பேசிவிட்டுத் தூங்கினால் போதாது ஸ்டாலின். கண்ணை விழித்துப் பாருங்கள். தவறு செய்பவர்கள் மீது கடுமையாக தண்டனை எடுங்கள். அப்போது தான் திராவிட மாடல் அரசு என்று பெருமைப்படுவதற்கு அர்த்தம் இருக்கும்.