Share via:
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை உடைக்கும் வகையில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படுவதற்கு திராவிட ஆதரவாளர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், ஒரு கைது நடவடிக்கை கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.
இன்று பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதோடு, ’உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி’ என்று வாழ்த்தும் தெரிவித்திருந்தார்.
இந்த மாநாட்டில் ஆன்மிகச் சொற்பொழிவு, கருத்தரங்கம், நாடகம், நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநாட்டு வளாகத்தில் 2,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு 50 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், பழனி கோயிலில் தமிழர்களின் உரிமை பறி போய்விட்டது என்பதைக் குறிப்பிடும் வகையில், பழனி கோயில் வழிபாடு” – ‘உரிமையைப் பறித்த பார்ப்பனர்கள்’ என்ற புத்தகம் வெளியிட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மருதமூர்த்தி திடீரென கைது செய்திருப்பது திராவிட ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து கொளத்தூர் மணி, ‘தமிழர்கள் வசம் இருந்த பழனிக் கோயில் பார்ப்பனர்கள் வசம் பறிபோன வரலாறு என்ன? அதை மீட்டெடுக்க நடந்த போராட்டங்கள் என்ன? இது குறித்து பழனி திருபோகநாதர் ஆதினம் சிவானந்த புலிப்பாணி அடிகளார் கூறுவது என்ன? போன்ற செய்திகள்தான் இந் நூலில் இடம் பெற்றுள்ளன.
தமிழ் முருகனுக்குத் தமிழர்களே வழிபாடு செய்துவந்த நிலையை மாற்றி, ஆரியர்களின்,ஆரியமொழி வழிபாட்டைத் திணித்ததை மாற்றி, மீண்டும் தமிழர்களின் வழிபாட்டை, தமிழ் வழிபாட்டைக் கோரும் இந்நூலினை ஏன் தடுக்க விரும்புகிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பா.ஜ.க.வை திருப்திபடுத்துவதற்காக முழு சந்திரமுகியாக ஸ்டாலின் மாறியதாலே புத்தகம் எழுதியதற்காக கைது செய்திருக்கிறார் என்று திராவிடர் கழகத்தினர் கடுமையாக குற்றம் சாட்டுகிறார்கள். தி.மு.க.வினர் எந்த பதிலும் சொல்லாமல் பஞ்சாமிர்தம் சாப்பிடுகிறார்கள்.