Share via:
இன்று எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை அ.தி.மு.க.வினர் கோலாகலமாக
கொண்டாடி வருகிறார்கள். குடிமராமத்து நாயகர், 7.5 இடஒதுக்கீடு தந்து அரசுப்பள்ளி மாணவர்களின்
மருத்துவக் கனவை நனவாக்கிய மக்கள் முதல்வர், விடியா அரசின் சிம்மசொப்பனம் என்றெல்லாம்
எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்து போஸ்டர் ஒட்டியும் சமூகவலைதளங்களில் பாராட்டியும் வருகிறார்கள்.
இன்று அன்னையர் தினம் என்பதை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி, ‘’அம்மா’
என்ற சொல்லை உச்சரிக்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றுத் தந்து, தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை
அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட இதயதெய்வம் அம்மா அவர்களின் நினைவுதான் நமக்கெல்லாம்
வருகிறது’ என்று வாழ்த்து வழங்கியிருக்கிறார்.
அதோடு, முத்திரைத்தாள் கட்டண உயர்வுக்கு கடுமையான கண்டனத்தைப்
பதிவு செய்திருக்கிறார். அதில், ‘மூன்றாண்டு சோதனை ஆட்சியின் பரிசாக தமிழ்நாடு முழுவதும்
முத்திரைக் கட்டணத்தை உயர்த்தியிருக்கும் விடியா அரசுக்கு கடும் கண்டனம்’ தெரிவித்திருக்கிறார்.
மேலும், ‘நிதி மேலாண்மை என்றால் என்னவென்றே தெரியாத ஸ்டாலினின்
விடியா அரசு 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி மக்களை கடனாளிகள் ஆக்கியுள்ளது.
அது போதாதென்று 150 சதவீதம் சொத்துவரி, வீட்டுவரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, மின்
கட்டண உயர்வு, குப்பை வரி உயர்வு, பால் மற்றும் பால் பொருட்கள் விலை உயர்வை ஏற்றியுள்ளது.
கடந்த 8.5.2024 தேதியிட்ட அரசு அறிவிக்கையின் படி தத்து ஆவணங்கள்,
ஒப்பந்த ஆவணங்கள், ரத்துப் பத்திரங்கள், நகல் பத்திரங்கள், குடும்ப உறுப்பினர் பவர்
பத்திரம் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணங்களை 10 மடங்கு முதல் 33 மடங்கு
வரை உயர்த்தியுள்ளது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.