Share via:

நாடாளுமன்றம் தொடங்கிய முதல் நாளிலேயே தி.மு.க.
எம்.பி.க்கள் அமளிதுமளியாக்கி வருகிறார்கள். புதிய கல்விக்கொள்கையில் உடனடியாக நிதி
வழங்க வேண்டும் என்று கடுமையாக குரல் கொடுக்க, அவர்களுக்கு எதிராக மத்திய அமைச்சர்
மீண்டும் அதிரடி குற்றச்சாட்டு கூறியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர
பிரதான், ‘தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
தேசிய கல்விக்கொள்கை விவகாரத்தில் தமிழ்நாட்டில் மாணவர்களை திமுக தவறாக வழி நடத்துகிறது;
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் கூட புதிய தேசியக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது;
தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை திமுக பாழடிக்கிறது. பி.எம். ஸ்ரீ திட்டத்தில்
கையெத்திட வந்த தமிழ்நாடு அரசு கடைசி நேரத்தில் யூ டர்ன் அடித்தது’’ என்று கடுமையாக
எதிர்ப்பு தெரிவித்தார்.
முன்பு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
அன்பில் மகேஷ், மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டாலும் புதிய கல்விக் கொள்கையை எந்நாளும் எதிர்ப்போம் என்று கூறியிருந்தார்.
இதை வைத்துப் பார்க்கும்போது இந்த திட்டத்தை ஆரம்பத்தில் ஸ்டாலின் அரசு ஏற்றுக்கொண்டதாக
அமைச்சர் கூறுவதே சரி என்று தெரிகிறது.
இதே போன்று வேலூர் டங்ஸ்டன் விவகாரத்திலும்
ஏலத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டு, அதன் பிறகு அனுமதி இல்லை என்று போராட்டம் நடத்தினார்கள்.
இப்படி மாறி மாறிப் பேசுவதையே அமைச்சர் கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் மும்மொழிக்
கொள்கை விவகாரத்தை எழுப்பிய கனிமொழிக்கு, ‘புதிய கல்விக் கொள்கையில் முதலில் ஒப்புதல்
கொடுத்த சூப்பர் முதல்வர் யார் என்று கனிமொழி கூற வேண்டும் என்று தர்மேந்திர பிரதான்
கேட்டார். அதோடு தேவையில்லாமல் பேசும் தமிழக எம்.பி.க்கள் அநாகரீகமானவர்கள் என்ற ரீதியில்
மக்களவையில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடுமையாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து இந்த பேச்சுக்கு திமுக எம்.பி.க்கள்
கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்
என அறிவிப்பு செய்தனர். இதையடுத்து தனது வார்த்தையை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தர்மேந்திர
பிரதான் கூறியிருக்கிறார். ஆக, ரெண்டு பக்கமும் மோதல் ஆரம்பம்.