Share via:
ஆற்றின் குறுக்கே தி.மு.க. அரசாங்கத்தால் கட்டப்பட்ட பாலம் 90
நாட்களில் அடித்துச் செல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகளின்
குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எ.வ. வேலு விளக்கம் அளித்திருக்கும் நிலையில் மக்கள் கொதிநிலையில்
இருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘’திருவண்ணாமலை மாவட்டம்
செங்கம் அருகே, அகரம்பள்ளிப்பட்டு- தொண்டமானூர் இடையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே
திமுக அரசால் கட்டப்பட்ட 16 கோடி மதிப்பிலான பாலம் கடந்த 02.09.2024 அன்று திறக்கப்பட்டது,
காலம் காலமாய் நிற்கவேண்டிய பாலமானது வெறும் 90 நாட்களில் ஒரே வெள்ளத்தில் ,அடித்துச்
செல்லப்பட்டு,மொத்தமாக உடைந்துள்ளது . இந்த திமுக ஆட்சியில் கட்டப்படுகிற பாலங்கள்
எவ்வளவு தரமற்று கட்டப்படுகிறது என்பதற்கு இந்த நிகழ்வே சாட்சி. பொதுமக்கள் பயணப்பட,
ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலங்கள் வலுவாக இருப்பதை உறுதி செய்யாத திமுக அரசுக்கு
எனது கடும் கண்டனம். மறுபடியும் கலெக்ஷன்-கமிஷன்-கரப்ஷன் எனும் தங்கள் தாரக மந்திரப்படியே
செயல்படாமல், இந்த பாலத்தை படிப்பினையாக கொண்டு இனி கட்டப்படுகிற பாலங்களை , மக்களின்
உயிரோடு விளையாடாமல் தரமான பாலங்களாக கட்டுமாறு விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்…’’
என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதேபோல் பா.ஜக.வின் நாராயணன் திருப்பதி, ‘’மத்திய அரசின் நபார்டு
வங்கி மற்றும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 16 கோடி ரூபாய் செலவில்
கட்டப்பட்ட திருவண்ணாமலை மாவட்டம் அகரம் பள்ளிப்பட்டு – தொண்டமனூரை இணைக்கும் பாலம்
மூன்றே மாதங்களில் இடிந்து விழுந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மாநில அரசு ஆய்வு செய்வதாக
அறிவித்துள்ளது ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்ட இந்த பாலம் மூன்றே
மாதங்களில் இடிந்து விழுந்தது குறித்து தீவிர விசாரணை செய்யப்பட வேண்டும். இந்த பாலம்
கட்டியதில் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் நடை பெற்றுள்ளதா என்பது குறித்த விசாரணையை மத்திய
புலனாய்வு அமைப்பான சி பி ஐ மேற்கொள்ள வேண்டும்’’ என்று கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்திருக்கும் அமைச்சர் எ.வ.வேலு, ‘வரலாறு காணாத
வகையில் 450 மி.மீ மேல் பெய்த கன மழையினால், சாத்தனூர் அணையிலிருந்து வழக்கமாக வெளியேற்றப்படும்
உபரி நீரின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாக அதாவது 200,000 கனஅடிக்கு மேல் அணையின்
பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும் இப்பாலமானது அணையிலிருந்து
24 கி.மீ. தொலைவில் உள்ளதால், தொடர் மழையினால் பாம்பாறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில்
ஏற்பட்ட வெள்ளநீரும் இணைந்து இப்பாலத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு பாலத்தின் மேற்பரப்பிற்கு
மேல் சுமார் 4 மீட்டர் உயரத்திற்கு நீரின் வேகம் அதிகரித்து ஓடியதால் இப்பாலம் பெரும்
சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து மீண்டும்
பாலம் சரி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்’’ என்று அறிவித்திருக்கிறார்.
அதேநேரம், ‘’எடப்பாடி ஆட்சியில் 7 பாலங்கள் கட்டி உடனே இடிந்து
விழுந்த வரலாறு உண்டு, கட்டும் போதே இடிந்த கடலூர் சிங்காரதோப்பு பாலமும் உண்டு. இதற்கும்
சிபிஐ விசாரணை வைக்கலாமா?’’ என்று தி.மு.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.