Share via:
மாநில அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை கவர்னர் மேலே அனுப்புவதில்லை, அப்படி அனுப்பினாலும்
அது நிறைவேற்றப்படவில்லை. நீட், ரம்மி உள்ளிட்ட எத்தனையோ தீர்மானங்களை மத்திய அரசு
கண்டுகொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டத்துக்குத் தமிழகத்தில்
ஸ்டாலின் தடை போட்டிருப்பது பா.ஜ.க.வினரிடம் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின், ‘’சாதிய அடிப்படையிலான தொழில்முறையை வலுப்படுத்தும்
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தைத் தற்போதைய வடிவில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது.
அதற்குப் பதிலாக, ‘சமூகநீதி அடிப்படையிலான – சாதியப் பாகுபாடற்ற – அனைத்துக் கைவினைக்
கலைஞர்களுக்கும் முழு ஆதரவளிக்கும்’ விரிவான திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கும்!
குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து வென்ற தலைவர்களின் கொள்கை வாரிசுகளான நாங்கள், குலத்
தொழில்முறையை ஊக்குவிக்கும் திட்டங்கள் எந்த வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம்’’
என்று வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பா.ஜ.க.வினர், ‘ தையற்கலைஞர்கள், பொற்கொல்லர்கள்,
செருப்பு தைப்பவர்கள், தச்சு வேலை செய்பவர்கள், படகு செய்பவர்கள், என பல்வேறு பதினெட்டு
வகையான தொழில்களில் காலங் காலமாக ஈடுபட்டு வருபவர்களுக்கு இந்த மத்திய அரசின் திட்டத்தில்
நிதியுதவி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 30 லட்சம் குடும்பங்களுக்கு,
ஐந்து வருடங்களுக்கு மத்திய அரசால் 13,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய
தொழில்நுட்ப மாறுதல்களுக்கு ஏற்ப காலங்காலமாக கைவினை தொழிலில் ஈடுபட்டு வருபவர்களால்
தங்களை தொழில்நுட்ப ரீதியாக மாற்றிக் கொள்ள முடியாத காரணத்தால், அவர்களை ஊக்குவிக்க,
உதவி செய்யவே இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
’விஸ்வகர்மா என்றால் படைக்கும் கடவுள். துவாரகை நகரம்,இந்திரப்பிரஸ்தம், இலங்கை
போன்ற நகரங்களை படைத்தது விஸ்வகர்மா. படைக்கும் தொழிலாளிகளுக்கு கடவுளாக வணங்கப்படுகிற,
வழிபடுகின்ற விஸ்வகர்மாவை ஒரு ஜாதிக்குள் அடைத்து, அது குலத்தொழில் என்று சொல்லி கேவலப்படுத்துவது
அவமானம் அல்லவா?
உலக மயமாக்கலின் வேகத்தை, உள்ளூர் சந்தையின் போட்டியை சமாளிக்க ஒருங்கிணைக்கவே
இந்த திட்டம் என்பதை பலமுறை எடுத்து சொல்லியும் இந்த திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு
முன்வராதது கண்டிக்கத்தக்கது. கிராம பஞ்சாயத்து தலைவர்கள் பயனாளிகளை அடையாளம் காணக்கூடாது
என்றும், கிராம நிர்வாக அலுவலர்களே அடையாளம் காண வேண்டும் என்பதும் அரசியல் ரீதியாக
தங்களின் கட்சியை சார்ந்தவர்களுக்கே இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும்
என்ற சிந்தனையின் அடிப்படையில் செய்யப்பட்ட பரிந்துரை’’ என்று டென்ஷன் ஆகிறார்கள்.
அதானியை விட்டுட்டு அடுத்த சண்டையை ஆரம்பிச்சுட்டாங்கப்பா.