Share via:
கிண்டியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் துறையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் பாலாஜி ஜெகன்நாதன்.
இவரிடம் புற்றுநோய் பிரிவில் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாய் காஞ்சனா கடந்த 6 மாதமாக புற்றுநோய்க்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து சொந்த விருப்பத்தின் பேரின் விக்னேஷ் தனது தாயை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 13) மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனை சந்தித்த விக்னேஷ் அவரிடம் 30 நிமிடங்களாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதனின் கழுத்தில் குத்தியுள்ளார். மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மருத்துவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இதற்கிடையில் மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷை அங்கிருந்தவர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து சில மணி கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை பரபரப்பானது.
இந்நிலையில் டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும், அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதது. இதன்படி தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி அவசர கால சிகிச்சை மற்றும் உயர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து துறை அரசு மருத்துவர்களும், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டத்திற்கு முன்னதாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கிண்டி மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் உதயநிதி, அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தது குறிப்பிடத்தக்கது.