Share via:
சென்னை எழும்பூர் முதல் விழுப்புரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள் காலை 10.18 முதல் பிற்பகல் 2.45 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரெயில்கள் காலை 9.08 முதல் பிற்பகல் 3.20 வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 2.20 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் (காலை 9.30க்கு புறப்படும் ரெயில்), திருமால்பூர் (காலை 11.05க்கு புறப்படும் ரெயில்), செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் ரயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருப்பினும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தாம்பரம் – செங்கல்பட்டு இடையே காலை 11.51, பகல் 12.35, 1.15, 1.35, 1.55, பிற்பகல் 2.45, 3.10, 3.30 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
அதே போல் செங்கல்பட்டு – தாம்பரம் இடையிலான சிறப்பு ரெயில்கள் காலை 9.30, பகல் 12.00 மணி, 1.00 மணி, 1.15 மணி, பிற்பகல் 2.20 மணியளவில் இயக்கப்படுகிறது சற்று ஆறுதலை அளிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.