Share via:
சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏ.சி.பெட்டிகள் இணைக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இதற்கான சோதனை விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் போக்குவரத்துக்கு பெரும்பாலும் நம்புவது மின்சார ரெயில் சேவையைதான். வேகமான மற்றும் சவுகரியமான பயணத்திற்காக மின்சார ரெயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை பல லட்சத்தையும் தாண்டி அதிகரித்து வருகிறது.
அதன்படி தெற்கு ரெயில்வேயின் ரெயில் கோட்டம் சார்பில், சென்னை கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை- வேளச்சேரி ஆகிய மார்க்கங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவைகளில் ஏ.சி. பெட்டிகளை இணைக்க வேண்டும் என்ற பயணிகளின் நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட உள்ளது.
நாள்தோறும் 630க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏசி பெட்டிகளையும் இணைப்பது என தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு ரெயில்களிலும் 2 முதல் 3 ஏ.சி. பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தவும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டு வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் சோதனை ஓட்டம் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
