Share via:
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வரும் காரணத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக வரலாறு காணாத வகையில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மீட்புப்படையினர் தென் மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழைவெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் படகுகள் மூலம் பொது மக்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் கனமழை பெய்தது. மேலும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பாளையங்கோட்டை சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு அரசு உதவிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தபடி காணொலியில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். தென் மாவட்டங்களில் பெய்து வரும் அடைமழை மழை குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தென்காசி மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தலைமை செயலகத்தில் இருந்தபடி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.