Share via:
தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு எதிராக பா.ஜ.க. போராடுகிறது என்று
பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி அண்ணாமலை வரையிலும் மாற்றி மாற்றி பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், செளமியா அன்புமணி தேர்தலில் நிற்பது வாரிசு அரசியல் இல்லை என்று பேசி
சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அண்ணாமலை.
தர்மபுரிக்கு வேறு ஒரு வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென
பா.ம.க. சார்பில் செளமியா அன்புமணி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு, அவர்
ஜெயித்து அமைச்சராகப் போகிறார் என்றும் பிரசாரம் செய்கிறார்கள்.
இந்த வாரிசு அரசியல் குறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம்
கேள்வி எழுப்பியதும், ‘’செளமியா அன்புமணி
24 வயதில் நேரடியாக அரசியலுக்கு வரவில்லை. அவர்களுடைய குடும்பத்தினர் உதவியால்
அரசியலுக்கு வரவில்லை. அவர் ஏற்கனவே பசுமை அமைப்பு என்ற ஒரு அமைப்பை கடந்த பல ஆண்டுகளாக
நடத்தி மக்களுக்காக சேவை செய்து உள்ளார்.
அதோடு அவர் திருமணம் ஆகி குழந்தை பெற்று அந்த குழந்தைக்கு திருமணம்
ஆன பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்றும் நேரு
மகன் போல் மு க ஸ்டாலின் மகன் போல் சிறுவயதிலேயே வரவில்லை என்பதால் சௌமியா அன்புமணி
வாரிசு அரசியல் பட்டியலில் வரமாட்டார் என்றும் அண்ணாமலை புதிதாக விளக்கம் அளித்தார்.
இதனை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வானதி அமைதியாகவே
இருந்தார். ஏனென்றால், செளமியா அன்புமணியின் தந்தை கிருஷ்ணசாமியும் சகோதரர் விஷ்ணு
பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேலும், செளமியாவின் பேத்தி இன்னமும்
சிறுமியாகவே இருக்கிறார். இதையெல்லாம் தெரிந்தும் அண்ணாமலையிடம் பேசாமல் அமைதியாகவே
போய்விட்டார் வானதி சீனிவாசன்.
இன்னும் என்னவெல்லாம் புதுப்புது விளக்கம் தரப்போறாங்களோ..?