Share via:
தேர்தல் நேரங்களிலும்
கட்சிக்குள் மந்தநிலை ஏற்படும் சமயத்திலும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு என்பதை
பெரிய பிரச்னை போன்று கிளப்பி பரபரப்பை ராமதாஸும் அன்புமணியும் உருவாக்குவார்கள்.
இந்த நிலையில் ,
சென்னை கொண்டையன் கோட்டை மறவன் சங்கத்தைச் சேர்ந்த பொன்பாண்டியன் என்பவர் தகவல் அறியும்
உரிமையின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் பாமக விடுக்கும் 10.5% கோரிக்கை வன்னியர்களுக்கு
எதிரானது என்பதை காட்டுகிறது
தமிழ்நாட்டில்
2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை MBBS படிப்பில் சேர்ந்த 24,330 மாணவர்களில்
4,873 பேர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் DNCக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டின்
கீழ் தேர்வு செய்யப்பட்டனர். 4,873 பேரில் 2,781 பேர் வன்னியர்கள் (11.4%). மற்ற அனைத்து
எம்.பி.சி சமூகங்களையும் சேர்ந்தவர்கள் 1,414 மாணவர்கள் (5.8%) மட்டுமே. மீதமுள்ள
678 இடங்கள் DNC மாணவர்களுக்கு கிடைத்தன.
எம்பிபிஎஸ் சேர்க்கை
போலவே மற்ற உயர்கல்வி சேர்க்கையிலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர்கள்
தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் மருத்துவப் பணிகள்
தேர்வு வாரியம் போன்றவை மூலம் அரசு வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவ
வாய்ப்பு பாமக கோரிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டை விட அதிகமாக இருப்பதை ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட
தகவலில் அம்பலமாகியுள்ளது.
இந்த விவகாரத்திற்கு
நீண்ட நேரத்திற்குப் பிறகு பதில் அளித்திருக்கும் ராமதாஸ், ‘’தமிழகத்தில்
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்கள் 10.50% விழுக்காட்டுக்கும் கூடுதலாக பிரதிநிதித்துவம்
பெற்றிருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில புள்ளி
விவரங்களை மட்டும் அரைகுறையாகவும், திரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் வன்னியர்களுக்கு
இழைத்த துரோகங்களை மறைக்க திமுக அரசு முயன்றிருக்கிறது. திமுக அரசின் இந்த மோசடி கண்டிக்கத்தக்கது.
இந்த விவகாரம் வன்னிய மக்களிடமும் முக்குலத்தோரிடமும் கடும் சலசலப்பை
ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டில் சமூக நீதியைக் காப்பதில் திமுக அரசுக்கு அக்கறை
இருந்தால், 1989-ஆம் ஆண்டு முதல் இப்போது வரையிலான 35 ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்வணையமும்
நடத்திய போட்டித் தேர்வுகள் என்னென்ன? மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில்
அரசு நிறுவனங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதில் ஒவ்வொரு வகுப்புக்கான
இட ஒதுக்கீட்டிலும் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு? பொதுப் பிரிவுக்கான
31% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமூகமும் பெற்ற பிரதிநிதித்துவம் எவ்வளவு என்பது பற்றி
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக அன்புமணி ராமதாஸும், இந்த விவகாரத்தை தி.மு.க. திட்டமிட்டுப்
பரப்புவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த புள்ளிவிபரம் வன்னியர்களுக்கு அதிர்ச்சியையும்
மிகவும் பின்தங்கிய சமூகத்தின் மற்ற பிரிவினருக்குக் கோபத்தையும் எழுப்பியிருக்கிறது.
உடனடியாக சாதி ரீதியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்க வேண்டிய நேரம் இது.