Share via:
இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பி.ஆர்.எஸ்.கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகரராவ் தோல்வியடைந்தார். அதன்படி காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.
இதற்கிடையில் தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான கே.சந்திரசேகரராவ் தனது பண்ணை வீட்டில் குளியல் அறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக கீழே வழுக்கி விழுந்தார். இதில் அவரது இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டதால் உடனடியாக ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து சந்திரசேகரராவுக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சந்திரசேகரராவ் பூரண நலமடைந்து வீடு திரும்பவேண்டும் என்று கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பி.ஆர்.எஸ். கட்சியின் தேசிய தலைவருமான சந்திரசேகரராவ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இத்தகவல் பி.ஆர்.எஸ். கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பூரண நலமடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.