Share via:

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்திய அரசு நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து
செய்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் அரசு சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது.
சிந்து ஒப்பந்தத்தை பாகிஸ்தானால் ரத்து செய்ய முடியும் என்றால் இலங்கையுடன் போட்டுக்கொண்ட
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாதா, எப்போது ரத்து செய்யப்படும் என்ற கேள்வி
எழுந்துள்ளது.
இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்,
‘’பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால் அதை உலகளவில் அம்பலப்படுத்த வேண்டும்.
அவர்களை அந்நியபடுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது.
மத நல்லிணக்கம்தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு தேவை என்பதை சங்பரிவார்கள்
இந்த சூழலிலாதாவது புரிந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் தாக்குதல் விவகாரத்தில் உள்துறை
அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என கூறுவதில் எங்களுக்கு எந்த அரசியல் ஆதாயமும்
இல்லை. ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே. 370 சட்டப்பிரிவை நீக்கினால் ஜம்மு காஷ்மீரில்
எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என பாஜக அரசு திரும்பத் திரும்ப கூறி வந்தது.
அங்கு சுற்றுலா செல்லலாம் என்கிற அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டது. அதனை நம்பி மக்கள்
அங்கு சுற்றுலா சென்ற போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று அன்றைய காங்கிரஸ்
அமைச்சர் பதவி விலகி முன்மாதிரியாக விளங்கினார். இந்நிலையில்தான் அமித்ஷா பதவி விலக
வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். மீண்டும் மீண்டும் அதை வலியுறுத்துவோம். காஷ்மீரில்
நடந்த தாக்குதல் இருநாட்டிற்கும் இடையேயான போராக மாறிவிடக்கூடாது. பயங்கரவாத தாக்குதலுக்கு
ஒருநாடு பொறுப்பு என பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடுக்கக்கூடாது. நம்முடைய வலிமையை
வேறு நாட்டின் மீது நிரூபித்து காட்டக்கூடாது.
அது உலக நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பயங்கரவாதத்திற்கு அதை உலக
அளவில் அம்பலப்படுத்த வேண்டும். அவர்களை அந்நிய படுத்த வேண்டுமே தவிர யுத்தம் தேவையில்லாதது.
இந்தியர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், இந்தியாவில் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட
வேண்டும்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்தை
ஒடுக்குவதற்கு பயன்படவில்லை, மாறாக அதை தீவிரப்படுத்துவதற்கு தான் பயன்பட்டுள்ளது என்பது
காஷ்மீரில் தற்போது நடந்துள்ள தாக்குதல் தெளிவுபடுத்தி உள்ளது. பயங்கரவாதிகள் ஜாதி,
மதம் என எதையும் பார்க்க மாட்டார்கள். காஷ்மீரில் நடந்த தாக்குதல் மதத்தை பார்த்து
நடந்த தாக்குதல் போல் தெரியவில்லை. இந்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே
தெரிகிறது. காஷ்மீருக்கு வரும் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் எச்சரிக்கை
விடும் விதமாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை உள்ளது உள்ளபடியே
புரிந்து கொள்ள வேண்டும். இதில் எந்த வித கற்பிதமும் தேவையில்லை…’’ என்று கூறியிருக்கிறார்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், ‘’சிந்து ஒப்பந்தத்தை
ரத்து செய்ய முடியும் என்றால் கண்டிப்பாக கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியாவால் ரத்து
செய்ய முடியும். ஆயிரக்கணக்கான மீனவர்கள் வாழ்க்கையில் விளையாடும் இலங்கை அரசுக்கு
கண்டனம் தெரிவிப்பது போன்று உடனடியாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்’’ என்று
கோரிக்கை வைக்கிறார்கள். நியாயமான கோரிக்கை.