Share via:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வாங்கியவர்களில் 8,833 பேரை தமிழக அரசு திடீரென்று தகுதி நீக்கம் செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். அதன்படி கடந்த 2 மாதங்களாக பெண்களுக்கு தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக இந்த ஆண்டு 7 ஆயிரம் கோடி ரூபா¬யை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் 5,046 பேர் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களது வங்கிக்கணக்கில் இம்மாதம் (அக்டோபர்) முதல் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை பெற்றவர்களில் 8,833 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த மாதம் உரிமைத் தொகை பெற்றவர்களில் இறந்தவர்கள், தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டு அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இத்திட்டத்தில் பயன்பெறும் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகுதிநீக்கம் என்பது எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது என்ற சந்தேகமும் மகளிர் மத்தியில் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.