Share via:
நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசனின் 97வது பிறந்தநாள் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து சென்னை அடையாறு தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள சிவாஜி மணிமண்டபத்தில் சிவாஜி சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சிவாஜியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சிவாஜியின் மன்களான ராம்குமார், பிரபு, நடிகர் விக்ரம் பிரபு, கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அந்த நிகழ்ச்சியின் போது நடிகர் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள ராஜபுத்திரன் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் அப்படத்தின் பேனரை ஒருவர் மேடையில் பிடித்தபடி நின்றிருந்தார். பின்னர் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேனரை காட்ட முயற்சி செய்து முண்டியத்து முன்பக்கம் வர முயற்சி செய்தார். இதை பார்த்து கடுப்பான சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், அந்த நபரை அடித்து தாக்கி உள்ளே தள்ளினார். இந்த சம்பவத்தை அங்கிருந்த பத்திரிகையாளர்களும் பொது மக்களும் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வைரலாக்கினார்கள்.
மேலும் கோபம் தீராத ராம்குமார், சிவாஜி சிலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய போது வழிவிடாதவர்களை தள்ளிவிட்டு சென்றதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பொது இடத்தில் இப்படி ஒருவரை தாக்கலாமா என்றும் சபைநாகரீகம் தெரியாமல் நடந்து கொண்டார் என்றும் ராம்குமார் மீது கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.