Share via:
– இந்தியாவுக்கு
வரலாற்று வெற்றி
ஐசிசி உலகக் கோப்பையை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று இந்திய மக்களுக்கு
பெரும் புத்துணர்ச்சி அளித்திருக்கிறது இந்திய அணி. இந்த வெற்றிக்குக் காரணம் கேப்டன்
ரோகித், அதிரடி மன்னன் விராட் கோலி மற்றும் ஆட்டத்தை மாற்றிக் காட்டிய பும்ரா.
இந்தியாவின் வெற்றி ஆட்டம் எப்படியிருந்தது என்று பார்க்கலாம்.
டாஸ் வென்றதும் தன்னுடைய பாணியில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார் கேப்டன் ரோகித் சர்மா.
முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து இந்திய அணிக்கு நல்ல ஆரம்பம்
கொடுத்தார் விராட் கோலி. இதையடுத்த இரண்டாவது ஓவரில் ரோஹித் அடுத்தடுத்த 2 பவுண்டரிகள்
அடித்துவிட்டு எதிர்பாராத வகையில் அவுட் ஆனார். அது மட்டுமின்றி அடுத்து வந்த உடனே
ரிஷப் பாண்ட் அதே ஓவரில் அவுட் ஆனார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சூரியகுமார் யாதவ் அவுட். இப்போது ஆட்டம் தன்னுடைய கையில் இருப்பதை உணர்ந்தார்
கோலி. அதுவரை அதிரடி காட்டிய கோலி ஆட்டத்தின் பாணியை மாற்றிக்கொண்டார். அவுட் ஆகிவிடக்
கூடாது என்பதில் ரொம்பவே உறுதியாக இருந்தார்.
எனவே அக்ஸர் படேலை ஆட வைத்து தான் அவருக்கு உறுதியாக இருந்தார்.
கோலியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அற்புதமாக ஆடத் தொடங்கினார் அக்ஸர். இனி நல்ல
ஸ்கோர் வந்துவிடும் என்று நினைப்பதற்குள் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பிறகும் 50 ரன்கள் அடிக்கும் வரையில் கோலி நிதானமாக விளையாடி,
அதன் பிறகு டாப் கியரில் அதிரடி காட்டத்துவங்கினார். அவருடன் நின்ற துபேவும் தன் பங்குக்கு
அடித்து ஆட ஸ்கோர் மளமளவென்று ஏறி நல்ல நிலைக்கு வந்து… உலகக்கோப்பையில் அடிக்கப்பட்ட
அதிகபட்ச ஸ்கோர் ஆனது. கோலி அடித்த 76 ரன்களே இந்தியாவின் மானத்தைக் காப்பாற்றியது.
ரோகித்தின் படை களத்தில் இறங்கியது. தன்னுடைய பாணியில் பந்து வீச
வந்தார் பும்ரா. அவரது உலகத்தரமான ஸ்விங் பாலில் க்ளீன் போல்ட் ஆனார் ஹென்ரிக்ஸ். அடுத்து,
கேப்டன் மார்க்ரம் விக்கெட்டை தூக்கினார் அர்ஷ்தீப்.
பிறகு நன்றாக ஆடிக்கொண்டு இருந்த ஸ்டப்ஸை அக்ஸரின் ஸ்பின் ஏமாற்றி கிளீன் போல்ட் ஆக்கியது.
அதன் பின்னர் வந்த க்ளாஸன் பேட்டிங் கிளாஸ் ஆக இருந்தது. குவிண்டானும் க்ளாசனும் அதிரடியாக
ஆடினார்கள்.
இதனால் 13வது ஓவரிலேயே வீச அழைக்கப்பட்ட அர்ஷ்தீப் அட்டகாசமான பிரேக் கொடுத்தார். குயிண்டான் டிகாக் விக்கெட்டை தூக்கினார். அடுத்து அதிரடிக்கு பெயர் போன மில்லர் உள்ளே வர… மீண்டும் அதிரடி சரவெடி பேட்டிங்தான். 14வது ஓவரில் குல்தீபின் கடைசி ஓவரில் சிக்ஸர் பவுண்டரி என்று நாலாபக்கமும் அடித்தார் மில்லர்.
14வது ஓவரில் 14 ரன்கள். அடுத்த 15வது ஓவர் இந்தியாவின் கனவில்
மண் அள்ளிப் போட்டது. ரெண்டு சிக்ஸர் ரெண்டு பவுண்டரி உட்பட 24 ரன் அந்த ஓவருல் கிடைத்தது.
ஆக, 30 பந்துகளில் 30 ரன்கள் தேவை. அதேநேரம் கை வசம் 6 விக்கெட் இருந்தது. ஆகவே, முதன்முறையாக
தென்னாப்பிரிக்கா கோப்பையைக் கைப்பற்றப் போகிறது என்றே எல்லோரும் நினைத்தார்கள்.
அந்த நம்பிக்கையைத் தகர்த்தவர் பும்ரா. அவரது ஓவரில் இரண்டு அதிரடி
ஆட்டக்காரர்களும் தட்டுத்தடுமாறி சிங்கிள் எடுத்தனர். 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 24 பந்தில் 26 ரன் தேவை என்றானது.
17வது ஓவரின் முதல் பந்தில் மாபெரும் திருப்புமுனையாக க்ளாஸன்
விக்கெட்டை தன் முதல் பந்தில் தூக்கினார் பாண்டியா. அது ஒரு பிரில்லியண்ட் பால். பந்தை
எங்கே போட்டாலும். அடிக்கிற மூடில் இருந்த க்ளாஸன்க்கு… ஆப் ஸ்டம்ப்லிருந்து நன்றாக
விலக்கி பந்தை வீச… பந்து விலகிப் போகிறது என்பதைகூட சிந்திக்க முடியாமல் அவர் பேட்டை
சுற்ற… வீச்சு கிடைக்காமல் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். அந்த ஓவரை மிக
அருமையாக வீசினார் பாண்டியா. வெறும் 4 சிங்கிள் மட்டுமே.
அடுத்த 18வது ஓவர். பும்ரா வீசிய இந்த ஓவர் வரலாற்றுச்சிறப்பு
மிக்க ஓவர். இந்த ஓவரை அவர் சரியாக வீசி மில்லரை தூக்கிவிட்டால்… இந்தியா வெற்றி.
ஆனால்… மில்லர், 2 பால் தடவி தன் விக்கெட்டை காப்பாற்றி விட்டு… 3வது பாலில்…
‘என்னை விட்டால் போதும்டா’ என சிங்கிள் எடுத்து ரன்னர் பக்கம் ஓடிப்போய் சேஃப் ஆகிக்கொள்ள…
பலியாடு ஜான்சன்…பேட்டிங். விடுவாரா பும்ரா..?!
பும்ராவால் மட்டும்தான் அப்படி ஒரு பால் போட்டு ஜான்சன் ஸ்டம்பை பறக்க வைக்க முடியும்.
பந்து எங்கே பூந்து எப்படி போனது என்றே ஜான்சனுக்கு புரியவில்லை. பும்ரா கொண்டாடியதை
பார்த்துவிட்டு… நம்ப முடியாமல் ஸ்டம்பை திரும்பி பார்த்ததும் தான்… அவர் அவுட்
என்பதையே அவர் உணர்ந்தார். அந்த ஓவரில் முழுவதும் இந்தியா டாப்பில் இருந்தது. வெறும்
2 ரன் மட்டுமே கொடுத்தார் பும்ரா. இப்போது 12 ரன்னில் 20 ரன் தேவை.
19வது ஓவரை அர்ஷ்தீப் சிங் அட்டகாசமாக வீசினார். வெறும் 4 ரன்கள்
மட்டுமே கொடுக்கவே 20 வது ஓவரில் 6 பாலுக்கு 16 ரன் தேவை என்ற நிலை.
கடைசி ஓவரை வீச வந்தார் ஹர்திக் பாண்டியா. மில்லர் இருக்கும் வரை
எந்த ரன்னும் சாத்தியம் என்பதால் மைதானம் அமைதியாகவே இருந்தது. அனைவரும் எதிர்பார்த்தபடி
பாண்டியா வீசிய முதல் பந்தை மில்லர் சிக்ஸர்க்கு தூக்கி அடிக்க, அந்த நேரத்தில் தான்
யாரும் நம்பமுடியாத ஆச்சர்யம் நடந்தது.
ஓர் அற்புதமான கேட்சை பவுண்டரியில் ஓடிக்கொண்டே பிடித்தார் சூர்யகுமார்.
நிலை தடுமாறி ரோப்புக்கு வெளியே போகும் முன் பந்தை தூக்கி மேலே எறிந்துவிட்டு… மீண்டும் ரோப்புக்கு உள்ளே வந்து, பந்தை பிடித்து
கேட்ச் நிறைவு செய்தார். தன்னுடைய அவுட்டை நம்ப முடியாமல் அதிர்ச்சியாக நின்றார் மில்லர்.
அந்த நேரத்திலேயே கோப்பை இந்தியாவுக்கு என்று முடிவாகிவிட்டது.
எதிர்பக்கம் ரபாடா இருந்தாலும் துல்லியமாகப் பந்து வீசி ஆட்டத்தைக்
கட்டுப்படுத்திவிட்டார் ஹிர்திக். 7 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வெற்றி
கொண்டது இந்திய அணி.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் தோல்வியையே சந்திக்காத தென்னாப்பிரிக்கா
மீண்டும் தோற்றுப் போனது. தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை ரோகித் சர்மாவும், தான் ஒரு
அற்புதமான கிங் என்பதை கோலியும், தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பும்ராவும்
காட்டி, இந்தியாவின் கொடியை பறக்க விட்டுள்ளார்கள்.
ஆட்ட நாயகன் விருது விராட் கோலிக்கும் தொடர் நாயகன் விருது பும்ராவுக்கும்
கோப்பை ரோஹித் சர்மாவுக்கும் கொடுக்கப்பட்டது. சபாஷ் இந்தியா.