Share via:
தினமும் கொலை, கொள்ளை நடந்துகொண்டிருந்த தமிழகத்தில் இப்போது தினம்
ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துவருகிறது. திருச்சியில் இருந்து சென்னைக்கு பிராஜெக்ட்
செய்வதற்கு வந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்தது இன்று வெளியே வந்துள்ளது.
கடந்த 9-ம் தேதி அந்த மாணவி கல்லூரியில் இருந்தபோது சிலர் அவரது செல்போனுக்கு, அவரது படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அனுப்பியுள்ளனர். பின்னர் அந்த
மாணவியை தொடர்புகொண்ட நபர், இதை மற்றவர்களுக்கு அனுப்பாமல் இருக்க வேண்டுமானால், தாங்கள்
அழைக்கும் இடத்துக்கு தாங்கள் அனுப்பும் காரில் வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த பெண் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வர,
அங்கு வந்த காரில் இருவர் அந்த மாணவியை கடத்திச் சென்றுள்ளனர். அவர்கள் அந்த மாணவியின்
முகத்தில் ஸ்பிரே அடிக்க, அவர் மயக்கமடைந்துள்ளார். பின்னர் பாலியல் ரீதியாக அவரை துன்புறுத்தி
அனுப்பியதாக கூறப்படுகிறது. அடுத்த நாளும் இதேபோல் அந்த மாணவியை போனில் அழைத்து காரில்
ஏற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில்
புகார் அளித்துள்ளார். இன்னமும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
நேற்றைய தினம் விளாத்திகுளம் பாலியல் படுகொலை ரொம்பவே கொடூரம்.
தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால் தனது
வீட்டில் இருந்து 200 அடி தொலைவில் உள்ள வயல்வெளிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.
வயல்வெளிக்குச் சென்ற மகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வீடு திரும்பாததால், உற்றார்
உறவினர்களுடன் அவ்வூர் முழுவதும் தேடியுள்ளனர்.
மாணவியைக் கண்டுபிடிக்க முடியாததால், அருகில் உள்ள குளத்தூர் காவல்
நிலையத்தில் அம்மாணவியின் தந்தை சுப்புராஜ் புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், அவரது
புகாரைப் பெற்றுக்கொண்டு மாணவியைத் தேடிக் கண்டுபிடிக்க உரிய முயற்சியை மேற்கொள்ளாமல்,
அங்கிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில்
புகார் அளிக்கச் சொல்லியுள்ளனர்.
விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்களை
அவமரியாதை செய்யும் வகையில் பேசியதோடு, காலை 10 மணிக்கு வருமாறு கூறி அனுப்பிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்கு வேடநத்தம் கிராமத்தின் காட்டு பகுதியில், பலாத்காரம்
செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பள்ளி மாணவியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை விளாத்திகுளம் மற்றும் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதே
காவல்துறை விழிப்புணர்வுடன் செயல்பட்டுத் தேடியிருந்தால், அந்த மாணவியை உயிரோடு காப்பாற்றி
இருக்கலாம்.
நேற்றைய முந்தைய தினம் சென்னை தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்தை அடுத்த
கீழக்கண்டை கிராமத்தை நோக்கி இரு சக்கர ஊர்தியில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும்
திங்கள் கிழமை இரவு சென்று கொண்டிருந்த நிலையில், தேவத்தூர் பகுதியில் மது போதையில்
இருந்த இரு மனித மிருகங்கள் அவர்களை இரு சக்கர ஊர்தியில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர்.
அதனால் இரு சக்கர ஊர்தியில் சென்ற சிறுவனும், இரு சிறுமிகளும் தவறி விழுந்த நிலையில்,
அவர்களை இரு மனித மிருகங்களும் சுற்றி வளைத்துள்ளனர்.
அவர்களில் சிறுவனும், ஒரு சிறுமியும் தப்பி ஓடிவிட்ட நிலையில்,
சிக்கிக் கொண்ட ஒரு சிறுமியை இரு மிருகங்களும் சிதைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த
சிறுமி உதவுவதற்கு கூட ஆள் இல்லாமல் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும்
பாதுகாப்பு இல்லை என்பதற்கு சான்றாகவே தினமும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான
பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது. திமுக
ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டதா..?
