Share via:
அ.தி.மு.க.வில் இருந்து வந்த செந்தில் பாலாஜி போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது, ஓட்டுனர் நடத்துனர் பணி வாங்கித் தருவதாக பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர் மீது 3 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். இவ்வழக்கு குறித்த விசாரணையானது எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து தி.மு.க.வில் இணைந்த செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் நள்ளிரவில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நடந்த அறுவைசிகிச்சைக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதியில் இருந்து காவலில் இருந்து வரும் செந்தில் பாலாஜி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கும்படி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பல கட்டங்களாக அவரது ஜாமீன் மனுக்கள தள்ளுபடி செய்யப்பட்டு காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புணையப்பட்ட பொய்யான வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் விருப்பம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சாட்சிகளின் குறுக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது.
அதன்படி நேரில் ஆஜரான கரூர் சிட்டி யூனியன் வங்கியின் தலைமை மேலாளரிடம், செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை மேற்கொண்டார். ஆனால் விசாரணை முழுமையாகாததால், இதன் விசாரணையை நீதிபதி அல்லி வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இதன் மூலம் அவருக்கு 56வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செந்தில் பாலாஜியின் விடுதலையை குறிவைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணை முதலமைச்சர் பதவியேற்று நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் அது மேலும் தள்ளிப் போகும் என்று தெரியவந்துள்ளது.