Share via:
வெற்றிகரமாக 200வது
நாளை சிறைக்குள் கொண்டாடி வரும் இலாகா இல்லாத அமைச்சரான செந்தில் பாலாஜி, ஜாமீனில்
வெளியே வருவதற்கு குறைந்தது ஒரு வருடமாவது ஆகும் என்று சொல்லப்படுவது தி.மு.க.வினரை
அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்
பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பணம் பெற்று நிறைய பேரை மோசடி செய்ததாக
புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை, கடந்த ஆண்டு ஜூன்
மாதம் செந்தில் பாலாஜியை கைது செய்தது. அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின்
கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவருக்கு பலமுறை ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதும், நீதிமன்றத்தில்
அவருக்கு கிடைக்கவில்லை. அவருடைய ஜாமீனுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து
வருகிறது. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி வெளியில் சென்றால் சாட்சிகளை கலைக்க
வாய்ப்பு இருப்பதாக நீதிமன்றத்தில் கூறி வருகிறது.
செந்தில்பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் ரெய்டு செய்த வருமான வரித்துறை,
அதற்கு விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. இதற்கு அவர் இதுவரை நேரில் ஆஜராகவில்லை.
அசோக் தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த சூழலில், வருமானவரித்துறையினர்
மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்கின் கரூர் வீட்டில் சோதனை நடத்தி
வருகின்றனர்.
ரெய்டு நடக்கும் நிலையில், இந்த அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்று வந்தது. செந்தில் பாலாஜி அமைச்சராகவும்,
செல்வாக்கு மிக்கரவாகவும் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அவர் எளிதில்
கலைத்துவிடுவார் என அமலாக்கத்துறை சார்பில் வாதம் வைக்கப்பட்டது. அசோக் வீட்டில் ரெய்டு
நடப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி
அல்லி நிராகரித்தார்.
பொங்கலுக்கு வெளியே வந்துவிடுவார் என்று எதிர்பார்த்த உடன்பிறப்புகள்
சோகத்தில் ஆழ்ந்துவிட்டனர். டெல்லியில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி அமைச்சருக்கு ஓர்
ஆண்டுக்குப் பிறகே ஜாமீன் கிடைத்ததை சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள், செந்தில்
பாலாஜிக்கும் ஓர் ஆண்டுக்குப் பிறகே ஜாமீன் கிடைக்கும் என்கிறார்கள்.
அதாவது, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே செந்தில் பாலாஜியை வெளியே
அனுப்புவார்களாம். அவர் கொங்கு பெல்ட்டில் தி.முக.வை ஜெயிக்க வைத்துவிடலாம் என்பதற்காகவே
இந்த மூவ் என்கிறார்கள்.
செந்தில் பாலாஜியை நம்பித்தான் தி.மு.க. இருக்கிறதா..?