Share via:
அமைச்சராகப் பதவியேற்ற சந்தோஷம் கலைவதற்குள் செந்தில்பாலாஜி தலைக்கு
மேல் நீதிமன்றத்தின் கத்தி ஊசலாடத் தொடங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி
தற்போது அமைச்சராக இல்லை, அதனால் சாட்சியங்கள் கலைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தோடு
ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் அமைச்சரான காரணத்தினால் அவர் சாட்சியை கலைப்பார்,
அதனால் இவருக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள
விவகாரம் காரணமாக செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை தியாகி
என்று பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின். அதையடுத்து தமிழகத்தின் அத்தனை அமைச்சர்களும்
அதிகாரிகளும் படையெடுத்துச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்திருக்கிறார்கள். இதையடுத்தே
அவர் சாட்சியங்களைக் கலைப்பார் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிக்கலில் இருந்து அவர் தப்பிக்க வேண்டுமென்றால் செந்தில்
பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்படி அவராக
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றால், அவருடைய ஜாமீன் ரத்து செய்யப்பட வாய்ப்பு
உண்டு என்கிறார்கள்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பல ஆயிரம் பேரை
ஏமாற்றிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு வேகம் எடுக்கிறது. செந்தில் பாலாஜி வழக்கை
தனி நீதிபதி விசாரித்து ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்கிற முனைப்பு இருக்கிறது.
அதோடு வருகிற சட்டமன்றத் தேர்தலுக்குள் இந்த வழக்கில் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும்
என்கிற நோக்கமும் தென்படுகிறது. ஆகவே, அமைச்சரவை பதவியை இழப்பதுடன் இனி தேர்தலில் போட்டியிடும்
நிலையே வராமல் போகலாம் என்கிறார்கள்.
ஆனால், அதெல்லாம் டெல்லியில் தலைவர் பேசிவிட்டார். எனவே, செந்தில்
பாலாஜிக்கு எந்த சிக்கலும் வராது என்று தி.மு.க.வினர் தெம்பாக இருக்கிறார்கள். என்ன
நடக்கிறது என்று பார்க்கலாம்,