Share via:
மாநகர பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காத காரணத்தால் சென்டர் மீடியனில் மோதி நின்ற சம்பவம் சென்னை தங்கசாலை அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்றும் மழைக் காலங்களில் பேருந்துகளின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிகிறது என்றும் பேருந்துக்குள் குடை பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வள்ளலார் நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த 48சி தடம் பேருந்தில் பயணிகள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து தங்கசாலை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பிரேக்கில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பேருந்து ஓட்டுனர் முன்னால் செல்லும் எந்த வாகனத்தின் மீதும் மோதாமல் இருக்க சாலை தடுப்பில் பேருந்தை மோதி சாமர்த்தியமாக நிறுத்தியுள்ளார்.
பேருந்து பலமாக மோதி நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனர். நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்ற போதிலும், ஒரு பெண் பயணிக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தங்கசாலை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து சென்டர் மீடியனில் மோதி நிறுத்தப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.