Share via:

பாஜகவுடன் கூட்டணி உறுதியான பிறகு, இது குறித்து கட்சியின் மூத்த
தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் பேசுவதற்காக எடப்பாடி பழனிசாமி விருந்துக்கு
ஏற்பாடு செய்திருந்தார். காஷ்மீர் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து இந்த விருந்து நிகழ்வு
தள்ளிப்போகும் என எதிபார்க்கப்பட்ட நிலையில், நடத்தப்பட்டதும், இந்த விருந்தை செங்கோட்டையன்
புறக்கணிப்பு செய்திருப்பது கட்சிக்குள் மீண்டும் ஒரு கலவரத்தை உருவாக்கியுள்ளது.
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி
கொடுத்த விருந்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன், மூத்த தலைவர்கள் பொன்னையன்,
தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும்,
முன்னாள் எம்பிக்களும் பங்கேற்றனர். பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும்
பங்கேற்றனர்.
மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல்,
மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகிய 7 வகையான அசைவ உணவுகளும், இட்லி, தோசை, இடியாப்பம்,
சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம், பொரியல், அவியல் என சைவ உணவுகளும் இடம் பெற்றிருந்தன.
ஆனால், இந்த விருந்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் டென்ஷனான
எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் பிரச்னை மேல் பிரச்னை செய்துகொண்டே இருக்கிறார்,
எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்
என்று செங்கோட்டையனுக்கு நெருக்கமான புள்ளிகளிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார் எடப்பாடி
பழனிசாமி.
அதேநேரம், இந்த விருந்து விவகாரத்தை தி.மு.க.வினரும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும்
கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இது குறித்து மருது அழகுராஜ், “தேசத்தையே கண்ணீரில்
மூழ்க வைத்த கதறல் ஒலி உலகையே உலுக்கியுள்ள நாளில்… ஏற்கனவே முதலமைச்சராக இருந்தவர்
இன்று எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் தேசியக்கொடி கட்டிய காரில் பயணிப்பவர் எடப்பாடி
தனது விருந்து கொண்டாட்டத்தை தவிர்த்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் அதனை தள்ளிவைத்திருக்க
வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரை இணைக்கும் வரை செங்கோட்டையன்
அமைதியாக மாட்டார் என்கிறார்கள்.