Share via:
எனக்கு காவி கலர் பூசப்பார்க்கிறாங்க, நான் அதுல சிக்க மாட்டேன்
என்று சொன்ன ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தார். சமீபத்தில் ராமர் கோயில்
விழாவில் அமர்ந்து பெருமிதப்பட்டு திரும்பியிருக்கிறார். ஆகவே, ரஜினியை சங்கி என்று
அவரது ரசிகர்களே வேதனையுடன் சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.
ரஜினிக்கு சங்கி முத்திரை குத்தப்பட்டுவிட்டதால், பொதுஜன ஆதரவை
இழந்துவிட வாய்ப்பு இருக்கிறது, வசூல் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், லால்
சலாம் ஆடியோ விழாவில், ‘ரஜினி சங்கி இல்லை’ என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்
ரஜினிகாந்தின் மூத்த மகளும், பிரபல இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
இளையராஜாவின் மகள் பவதாரணியின் இழப்பு காரணமாக சினிமா உலகமே
சோகமாக இருந்த நேரத்தில், லால் சலாம் ஆடியோ விழா தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதை பற்றி கவலைப்படாமல் விழாவை நடத்திவிட்டார்கள்.
இந்த விழாவில் பேசிய ஐஸ்வர்யா, “இந்தக் கதைக்கு நாங்க தயாரிச்ச
ஷோ – ரீலை அப்பா பார்த்துட்டு, அதுக்குப் பிறகுதான் இந்த படத்துக்குள் வந்தார். பொண்ணுக்கு
ஒரு கஷ்டம்னா அப்பா பணம் கொடுக்கலாம். என் அப்பா படம் கொடுத்திருக்கார், வாழ்க்கைக்
கொடுத்திருக்கார்.
எங்க அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. ஒரு அரசியலை சார்ந்தவங்களை
சங்கின்னு சொல்வாங்கன்னு சொல்றாங்க. அவர் சங்கி இல்ல, ரஜினிகாந்த் சங்கி கிடையாது.
இந்தப் படத்தைப் பார்த்தா உங்களுக்கே அது புரியும். ஒரு சங்கி இந்தப் படத்தைப் பண்ண
முடியாது. ஒரு மனிதநேயவாதிதான் இந்தப் படத்தை பண்ண முடியும். அந்த தைரியம் அவருக்கு
மட்டும் தான் இருக்கு. நான் கர்வமாகச் சொல்றேன். நீங்க இந்து, கிறிஸ்டியனா இருக்கலாம்.
ஆனால், ரஜினிகாந்த் ரசிகராகத்தான் இந்த படத்தை பார்ப்பீங்க” என்றார்.
இதையடுத்து பேசிய ரஜினிகாந்த், ’எனது இன்னொரு தாய் தான் ஐஸ்வர்யா,
நாம் 10 சதவீதம் அன்பு கொடுத்தால், 100 சதவீதம் திரும்பி கொடுப்பார். நான் முடியாமல்
மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த போது, அவர் ஒற்றை ஆளாக தன்னை பார்த்து கொண்டார்.
இதனால் சவுந்தர்யாவும் என்னிடம் கோபித்து கொள்ளமாட்டார். அவருக்கு ஒரு கைக் குழந்தை
இருந்ததால் அவரால் வரமுடியவில்லை. கடவுளே 2 பெண் குழந்தைகள் வடிவில் எனக்கு பிறந்துள்ளனர்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவின் போது, தான் சொன்ன காக்கா –
கழுகு கதையை, விஜய்யை தாக்கிப் பேசியதாக நினைத்துக் கொண்டது என்னை வேதனையடையச் செய்தது.
எனக்கு நான் தான் போட்டி. அப்படி விஜய்க்கு விஜய் மட்டுமே போட்டி. நான் எப்போதுமே விஜய்யின்
நலம் விரும்பி. அவர் மிகவும் சிரமப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கிறார். அரசியலுக்கு
வருகிறார். சேவைகள் செய்கிறார்…’’ என்று விஜய்க்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பெயரைச் சொன்ன நேரத்தில் மிகப்பெரும்
வரவேற்பு கிடைத்தது ரஜினி ரசிகர்களையே ஆடிப்போகச் செய்திருக்கிறது. எப்படியோ விஜய்க்கு
வெள்ளைக் கொடி காட்டிவிட்டார் ரஜினி. அதேபோல் லால் சலாம் படத்துக்கு வாங்க என்று ரசிகர்களிடம்
புரமோஷன் செய்யத் தொடங்கிவிட்டார். படம் ரிலீஸ் ஆகும் வரையிலும் இனி பேசிக்கொண்டே இருப்பார்.