News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தந்தை பெரியார் குறித்து வரலாற்று உண்மைகளுக்கு புறம்பாக கீழ்தரமாகவும், அவதூறாகவும் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை இன்று 30க்கும் மேற்பட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் முற்றுகைப் போராட்டம் நடத்திவருகிறார்கள்.

சீமான் வீடு முற்றுகைப் போராட்டத்தை ஒட்டி சென்னை முழுவதும் எக்கச்சக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்களும் ஓட்டப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சீமான் படத்துக்கு செருப்பு மாலை போடுவதுடன் ஃப்ளக்ஸை செருப்பால் அடித்துப் போராடுகிறார்கள்.  ‘எங்கள் நாடு பெரியார் நாடு மானம் கெட்ட சீமானே வெளியேறு’ என்று முழக்கம் எழுப்பி வருகிறார்கள்.

பெரியார் குறித்து சீமான், “தந்தை பெரியார் தாய் மொழியை சனியன் என்று கூறினார்; வள்ளலாரை விட பெரியார் என்ன புரட்சி செய்துவிட்டார்; தாய்- மகளுடன் உறவு வைத்துக் கொள்ள சொன்னவர்தான் பெரியார்- அவரா பெண்ணுரிமைக்கு போராடியவர்; அம்பேத்கரும் பெரியாரும் எந்த புள்ளியில் ஒன்றாக இணைகிறார்கள்?” என்றெல்லாம்  அடுத்தடுத்து சீமான் விமர்சித்துள்ளார்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு பெரியார் உணர்வாளர்கள் ஆதாரங்கள் கேட்ட போது, பெரியார் புத்தகங்களை நாட்டுடைமையாக்கினால் அதில் கிடைக்கும் என அலட்சியமாக பதில் கூறியதால் சீமானுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கும் வகையில் சீமான் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

முற்றுகைப் போராட்டத்தையடுத்து சீமான் வீட்டுக்கு பாதுகாப்பு தரும் வகையில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் நேற்று இரவு முதலே அவரது வீடு முன்பாக குவிந்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் 50க்கும் மேற்பட்ட ஆண், பெண் நிர்வாகிகள் சிலர் கைகளில் உருட்டுக் கட்டைகளுடன் நின்றவர்கள், ‘’எங்களைத் தாக்க முயன்றால் நாங்கள் பதில் தாக்குதல் நடத்துவோம்; அதற்காகவே உருட்டுக்கட்டைகளுடன் நிற்கிறோம்’’ என்று ஆவேசம் காட்டுகிறார்கள். காலையில் உணவு பரிமாறப்பட்ட நிலையில், தொண்டர்களுக்கு மதியம் பிரியாணி தயாராகி வருகிறது.

அதேநேரம், சீமான் வீட்டில் முற்றுகை என்று சொல்லிவிட்ட் என்று அருகிலிருக்கும் ரிலையன்ஸில் போராட்டம் நடத்துகிறார்கள் என்று நாம் தமிழர் அமைப்பினர் போராட்டக்காரர்களை கிண்டல் செய்துவருகிறார்கள். 200க்கும் மேற்பட்ட போலீஸார்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் வன்முறை ஏற்படுவதற்கு முன்னர் கைது செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. வன்முறை நிகழாமல் இருக்க வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link