Share via:
வரும் 2026 தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும்
என்பதில் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும்
மட்டுமே உறுதியாக இருக்கின்றன. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியினர் அ.தி.மு.க.வை ஒழித்துவிட்டு,
இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கு மட்டுமே முயற்சி செய்கிறார்.
மும்முனைப் போட்டி இருக்கும் பட்சத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு
வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. ஆகவே, ஒரே கொள்கையில் இருக்கும் இரண்டு கட்சிகளும்
ஒன்றிணைந்து நின்றால் தி.மு.க.வை வென்றுவிடலாம் என்பது எடப்பாடியின் சிந்தனையாக இருக்கிறது.
இப்போது பிரேமலதாவின் பார்வை பா.ஜ.க.வின் பக்கமே இருக்கிறது. இப்போது
வரை பிரேமலதா அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தாலும் ஆதாயம் கிடைத்தால் தாவிவிடுவார் என்பதால்
2026 தேர்தலுக்கு வலுவான கூட்டணி வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.
இந்த தேர்தல் சீமானுக்கும் கடுமையான தேர்தலாக இருக்கும். ஏனென்றால்
மாணவர்கள் மட்டும் இளைஞர்கள் ஓட்டுக்களை மட்டுமே அறுவடை செய்துவருகிறார் சீமான். வரும்
தேர்தலில் இந்த ஓட்டுக்களை விஜய் கணிசமாக கவர்ந்துகொள்வார். ஆகவே, நாம் தமிழர் கட்சியினரால்
வரும் தேர்தலில் தனித்து நின்று எதுவும் சாதிக்க முடியாது. ஆகவே, அ.தி.மு.க. கூட்டணிக்கு
வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலை தனித்து சந்திப்போம், நிச்சயம் கூட்டணி கிடையாது
என்றெல்லாம் சீமான் பேசிவந்தாலும் அவருக்கும் உள்ளூர உதறல் இருக்கிறது. எனவே, கணிசமான
தொகுதிகளும் துணை முதல்வர் பதவியும் கொடுத்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வது தவறு
இல்லை. ஜெயித்தால் நமக்கு லாபம். தோற்பது நமக்குப் புதிது இல்லை. ஆகவே, கூட்டணி சேரலாம்
என்று சிலர் ஆலோசனை கூறி வருகிறார்கள்.
அதேநேரம், திமுகவின் தற்காலிக தோல்விக்காக நாம் தமிழர் கட்சியின்
எதிர்காலத்தை மொத்தமாக இழக்க முடியாது என்று சிலர் எதிர்ப்பு காட்டியும் வருகிறார்கள்.
இப்போதைக்கு, ‘சசிகலா, பன்னீர், தினகரன் ஆகியோரை சேர்த்துக்கொண்டால்
இந்த யோசனையை நாம் பரிசீலனை செய்யலாம்’’ என்று கூறிவருகிறாராம் சீமான். அதற்கு வாய்ப்பே
இல்லை வேறு கோரிக்கை வையுங்கள் என்று அ.தி.மு.க. சார்பில் கூறப்பட்டுள்ளதாம்.