Share via:
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப்பொருட்கள் வழங்கிய
தவெக பெண் பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கொடுந்தாக்குதல் தொடுத்திருப்பது
எதேச்சதிகாரத்தின் உச்சம் என்று விஜய் கட்சியின் நிர்வாகி பாதிக்கப்பட்டதற்குக் குரல்
கொடுத்திருக்கிறார் சீமான். இதுவரை சீமான் மீது கடுமையான தாக்குதல் தொடுத்த விஜய் ரசிகர்கள்
என்ன ரியாக்ஷன் செய்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.
இன்று சீமான், ‘’சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில்
நிகழ்ந்த தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையான நிலையில், குடிசைகளை இழந்த மக்களுக்கு
உதவும் நோக்குடன் தமிழக வெற்றிக் கழகத் பொறுப்பாளர்கள் அத்தியாவசியப் பொருட்களும்,
உணவும் வழங்கியதை தமிழ்நாடு காவல்துறை தடுத்ததோடு, பெண் நிர்வாகிகள் என்றும் பாராமல்
கடுமையாக தாக்கியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது என்ன தேசக்குற்றமா?
அதற்காக திமுக அரசு காவல்துறையை ஏவி கடுமையாக தாக்கியுள்ளது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.
சனநாயக நாட்டில் மக்கள்தானே மன்னர்கள்? அரசியல் என்பதே மக்களுக்கு செய்கின்ற சேவைதானே?
அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் தொடங்கி அரசு அதிகாரிகள்வரை அனைவருமே மக்களுக்கு தொண்டு
செய்யும் சேவர்கள்தான் எனும்போது மக்களுக்கு உதவிசெய்வதை, அதுவும் எதிர்பாராத விபத்தில்
சிக்கி நிற்கதியாய் நிற்கும் மக்களுக்கு இக்கட்டான நேரத்தில் உதவி செய்ததை தடுத்து
நிறுத்தி திமுக அரசின் காவல்துறை தாக்கியது ஏன்?
உண்மையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி இருக்க வேண்டியது நல்ல
அரசின் முழுமுதற் கடமையாகும். திமுக அரசு செய்யத்தவறியதை ஓர் அரசியல் இயக்கத்தினர்
தாமாக முன்வந்து உதவினார்கள் என்றால் அதை தட்டிகொடுத்து பாராட்ட வேண்டுமே தவிர, தடுத்துநிறுத்தி,
தாக்குவது சிறிதும் மனச்சான்றற்ற கொடுஞ்செயலாகும். பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு உதவி செய்வது என்றால் கூட எங்கள் பெயரை ஒட்டி நாங்கள் மட்டும்தான் செய்ய
வேண்டும், நாங்கள் செய்யும்வரை வேறு யாரும் உதவக்கூடாது என்பது என்ன மாதிரியான மனநிலை?
இதற்கு பெயர்தான் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச்செய்யும் திராவிட மாடலா? இதுதான்
திமுக பெற்றுத்தந்த சமூக நீதியா?
திமுக அரசின் இத்தகைய அதிகார அட்டூழியங்கள் அனைத்தையும் மக்கள்
பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்! ஆகவே, த.வெ.க பெண்
நிர்வாகிகளை தாக்கிய காவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டுமெனவும், மக்களுக்கு
உதவுதைக்கூட தடுத்து தாக்கும் இதுபோன்ற கொடுமைகள் தொடரா வண்ணம் உரிய நடவடிக்கை எடுத்திட
வேண்டுமெனவும் தமிழ்நாட்டு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’’ என்று
கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரம் சமீபத்தில் விஜய் கட்சியில் இருந்து திமுகவில் சேர்ந்திருக்கும்
சமூக ஊடக பிரபலம் வைஷ்ணவி, ‘உங்கள் கட்சியை சேர்ந்த மகளிர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்
என்றவுடன் நீங்கள் ஒரு கட்சித் தலைவராக கண்டனம் தெரிவித்துள்ளீர்கள். சிறப்பு!! ஆனால்
என்னை கடந்த ஒரு மாத காலமாக உங்கள் கட்சித் தொண்டர்கள் மிக ஆபாசமான வார்தைகளாலும் தரக்குறைவாகவும்
வசைப்பாடுகிறார்கள், அதை கண்டித்து தாங்கள் ஏன் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை!? உங்கள்
கட்சி பெண்களை மற்றவர்கள் தாக்கினால் மட்டும் தான் கண்டனமா… உங்கள் கட்சி அல்லாத பெண்களை
உங்கள் கட்சிக்கார்ர்கள் தாக்கினால் அப்பொழுது நீங்கள் கட்சித் தலைவராக கண்டனம் தெரிவிக்க
மாட்டீர்களா!?
உங்களுக்கு வந்தா ரத்தம்…. எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா!?
What bro very wrong bro!!
பாதிக்கப்பட்ட கங்காவதி அவர்களின் பெயரை குறிப்பிட்ட உங்களுக்கு
வயிற்றில் எட்டி உதைத்த காவலரின் பெயரை குறிப்பிட முடியவில்லையா!? ஆடைகளை கிழித்த அதிகாரியின்
பெயர் தான் உங்களுக்கு தெரிவில்லையா!? மக்கள் போராட்டத்தையும் சட்டப் போராட்டத்தையும்
கையில் எடுப்பேன் என்று கூறியுள்ளீர்கள். சட்டப் போராட்டத்தில் வெல்ல சாட்சி முக்கியம்
தானே — இங்கே குற்றவாளியின் பெயரே இல்லை, காவல் துறையை பொத்தா பொதுவாக குறை கூறியுள்ளீர்கள்.
இது உங்க பட டீசர் மாதிரி இருக்கு… ஒலி அதிகம், ஆழம் கம்மி’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.
வைஷ்ணவிக்கு எதிராகக் கொந்தளிக்க முடியாமல், சீமானுக்கு ஆதரவாகப்
பேசவும் முடியாமல் விஜய் ரசிகர்கள் தவியாய் தவிக்கிறார்கள்.