Share via:
ஒரு பாடலை ஹிட் ஆக்குவதற்காக எக்கச்சக்கமாக புரமோஷன் செய்யவேண்டிய
காலகட்டம் இது. ஆனால், சாட்டை துரைமுருகனை கைது செய்தது மூலம் கருணாநிதி பாடல் ஒரே
நாளில் சூப்பர் ஹிட் டிரெண்டிங் ஆகியிருக்கிறது. இது வரை அந்த பாடலை கேட்காதவர்கள்
கூட, டவுன்லோடு செய்து பலருக்கும் போட்டுக் காட்டுகிறார்.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர் அணி வைத்திருப்பதாக சொல்லப்படும்
தி.மு.க.வுக்கு சாட்டை துரைமுருகன் கைதும் அவர் விடுதலை செய்யப்பட்டதும் மிகப்பெரும்
கரும்புள்ளியாக மாறியிருக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக (பாடியதாக)
சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு மேடையில் வைத்து இப்படி பேசுவது
அநாகரிகம் என்பது நிஜமாக இருந்தாலும், அனைத்து கட்சியினரும் இதைத் தான் செய்கிறார்கள்
என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஏனென்றால் பெருந்தலைவர் காமராஜர், எம்.ஜி.ஆர்., அண்ணா மீதெல்லாம்
இதைவிட மோசமாக கருணாநிதியே பேசியிருக்கிறார். கருணாநிதி காலத்தில் வெற்றி கொண்டான்,
தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் பேசிய மேடைப் பேச்சுகளைக் கேட்டாலே காது கூசும். இப்போதும்
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இப்படித்தான் பேசுகிறார். அதற்காக கட்சியை விட்டு நீக்கம்,
பின் திரும்பவும் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இந்த விஷயத்தில் துரைமுருகன் கைது நீதிமன்றத்தில் விடுவிக்கப்படும்
என்பதை தி.மு.க. எதிர்பார்க்கவில்லை என்பதால் மிகப்பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நேரத்தில் சவுக்கு சங்கர் பாணியில் அவருக்கு விபத்து
ஏற்படுத்தப்பட்டது. இன்று சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தால் நிச்சயம் பாத்ரூமில் வழுக்கி
விழுந்து கையில் மாவுக்கட்டுடன் வெளியே வந்திருப்பார். எப்படியோ நீதிமன்றத்தின் புண்ணியத்தில்
ஜஸ்ட் எஸ்கேப் ஆகிவிட்டார். ஆனாலும், அரசு விடப்போவதில்லை, வேறு ஏதேனும் வழியில் அவரை
சிறையில் தள்ளவே முயற்சி எடுக்கும்.
அதேநேரம், நேற்று முதல் இப்போது வரையிலும் துரைமுருகன் பாடிய பாடல்
செம வைரல் ஆகியிருக்கிறது.. சதிகாரன் கருணாநிதி பாடல் இந்திய அளவில் அதிகம் தேடி பாடிய
பாடலாகவும் டிரெண்டிங் ஆகவும் மாறியிருக்கிறது. ஒரு பாடலை சூப்பர் ஹிட் ஆக்குவதற்கு
இப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை தமிழகம் அறிந்துகொண்ட தினம் இன்று.