Share via:
காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலுக்கு எப்போதும் பஞ்சமே இருந்ததில்லை.
அதற்கு முத்தாய்ப்பாக ஒரு உண்ணாவிரத நாடகம் அரங்கேறிவருகிறது.
டெல்லி காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழக காங்கிரஸ் தலைமை ஆகிய யாரிடமும்
ஆலோசனை, ஒப்புதல் பெறாமல் திடீரென உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார் காங்கிரஸ்
எம்.பி. சசிகாந்த் செந்தில்.
அதாவது, சமக்ர சிக்க்ஷா அபியான் (SSA) திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு
வரவேண்டிய நிதியை விடுவிக்க கோரி மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் நாடாளுமன்ற
உறுப்பினர் சசிகாந்த் செந்தில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
தேவையில்லாத சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதற்காக திமுக
அரசு அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை தடுத்து நிறுத்தி மருத்துவமனையில் போட்டது. மருத்துவமனையிலும்
உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுரைப்படி சென்னை
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுவரை அவரை கண்டுகொள்ளாமல் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
மாநில தலைவர் செல்வபெருந்தகை இப்போது நேரில் வந்து ஆதரவு தெரிவித்து உடல்நலம் குறித்து
விசாரித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று செல்வப்பெருந்தகை
வைத்த கோரிக்கையை சசிகாந்த் நிராகரித்துவிட்டார் என்பதுடன் அவரது பதவியைக் குறிவைத்தே
இந்த நாடகம் நடப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.
அதேநேரம் எதிர்க்கட்சிகள், ‘’சசிகாந்த் செந்தில் மட்டும் போராடினால்
போதுமா..? தமிழக எம்பிக்கள் 39 பேரை இணைத்து போராட்டம் நடத்தலாம். அதோடு இந்த நாடகத்தை
டெல்லியில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்’’ என்று சிண்டு முடிகிறார்கள். தமிழகத்தில்
நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் ஜாலியாக ஊர் சுற்றுகிறார் ஸ்டாலின்.