Share via:
சிறையில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர் இத்தனை நாட்களும்
அடக்கியே வாசித்துவந்தார். அதனால் இனி தி.மு.க. குறித்து கடுமையான விமர்சனங்கள் எதுவும்
வைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டு வந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத
வகையில் தி.மு.க.வின் மறைமுகப் புள்ளி மாப்பிள்ளை சபரீசன் மீது கடுமையான பல குற்றச்சாட்டுகளை
எழுப்பியிருக்கிறார்.
ஜெயலலிதாவுக்கு பினாமியாக சசிகலா இயங்கிவந்து எப்படி அ.தி.மு.க.
அழிவுக்குக் காரணமாக இருந்தாரோ அதே பாணியில் தி.மு.க.வுக்கு சபரீசன் செயல்படுகிறார்
என்று தெரிவித்திருக்கிறார். அவரது பதிவில், ‘’தஞ்சையில் ஒரு சாதாரண குடும்பத்தில்
இருந்து வந்த சசிகலா கேசட் கடை வைத்துப் பிழைத்தவர் என்றால் சபரீசனும் நெல்லையில் ஒரு
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். இன்று சபரீசனே அரசு சார்பில் டெண்டர், பதவி மாற்றம்
உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தீர்மானிப்பவராக இருக்கிறார்.
அதேநேரம் சசிகலாவை கடைசி வரையிலும் ஜெயலலிதா நிழலாகவே வைத்திருந்தார்.
அவருடைய அதிகாரத்தை வெளியுலகத்திற்குக் காட்டியதேயில்லை. ஆனால், சபரீசனுக்கு ஸ்டாலின்
முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். சபரீசன் போடும் உடை, கட்டும் வாட்ச், வாங்கியிருக்கும்
வாகங்களை வைத்தே சொத்துக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடலாம்’’ என்று மத்திய
அரசுக்கு லட்டு போல விஷயங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.
அதேபோன்று, ஊடகங்களக் கட்டுப்படுத்தும் பென் அமைப்பையும் சவுக்கு
சங்கர் அம்பலப்படுத்தியிருக்கிறார். பிரசாந்த் கிஷோரின் பாணியில் சபரீசன் தொடங்கியதுதான்
பென் அமைப்பு என்று சொல்லும் சவுக்கு சங்கர், ‘’முதலில் பென் நிறுவனத்துக்கு ஆதவ் அர்ஜுன்
தலைமை தாங்கியிருந்தார். அவர் உள்ளபடியே நல்ல யோசனைகளை சொல்லி, அதை செயல்படுத்தச் சொல்ல,
பல்வேறு காரணங்களால், திராவிட மாப்பிள்ளைக்கு அவரை பிடிக்காமல் போய், அனந்து என்கிற
பிராமணரை பென் நிறுவனத்துக்கு தலைவராக நியமித்து, இந்நாள் வரை அனந்துதான் பென் நிறுவனத்தை
நடத்தி வருகிறார். திராவிட மாப்பிள்ளையின் நிறுவனம் என்பதால், இந்நிறுவனம் சொல்வது
அத்தனையையும், சிரமேற்கொண்டு அரசுத் துறைகள் செய்ய வேண்டும். திராவிட மாப்பிள்ளை, தலைமைச்
செயலர் முருகானந்தம், துணை முதல்வர் 2 – தினேஷ், முதல்வரின் செயலர் உமாநாத், உளவுத்துறை
ஐஜி செந்தில்வேலன், நிதிச் செயலர் உதயச்சந்திரன், இன்னும் சிலர் உள்ளிட்ட வாட்ஸப் குழுவே
உள்ளது. அரசு எடுக்கும், எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள், இந்த வாட்ஸப் குழுவில்
விவாதிக்கப்படும்.
தமிழக உளவுத் துறையில், சுதந்திரத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்து, இந்நாள் வரை பல்வேறு தரவுகள், புள்ளி விபரங்கள் இருக்கும். அவற்றை பென் நிறுவனத்தோடு
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அரசு துறைகள் போலவே, தமிழக ஊடகங்களையும்
PEN நிறுவனம் தான் கட்டுப்படுத்துகிறது. தொலைக்காட்சி சேனல்களைப் பொறுத்தவரை, அரசு
கேபிளில் சேனலின் அலைவரிசையை மாற்றி விடுவோம் என்ற மிரட்டலே, சேனல் உரிமையாளர்கள்
/ எடிட்டர்களை தவழ வைக்கும்.
வருடத்துக்கு ஒரு முறை, திராவிட மாப்பிள்ளை அச்சு ஊடக ஆசிரியர்களை
அழைத்து விருந்து வைப்பார். திராவிட மாப்பிள்ளையோடு விருந்து அருந்திய பெருமிதத்தில்,
பெரும்பாலானோர் நெகிழ்ந்து, மாப்பிள்ளையின் அடிவருடியாகி விடுவார்கள். அச்சு ஊடகங்கள்
பெரும்பாலும் (தினமலர் தவிர்த்து), அரசு விளம்பரங்கள் இல்லாவிட்டால் பெரு நட்டத்தை
சந்திக்கும். இந்தக் காரணங்களைத் தவிர்த்து, தமிழ்ச் சூழலில் பெரும்பாலான பத்திரிக்கையாளர்கள்
திமுக ஆதரவாளர்களே. திமுகவை விட்டால், தமிழ்நாடு அழிந்து விடும் என்று உறுதியாக நம்பும்
பத்திரிக்கையாளர்களே பெரும்பாலானோர். இது போக, PEN பராமரிப்பில், பல யுட்யூப் சேனல்கள்
நடந்து வருகின்றன. அந்த சேனல்களுக்கு பெரிய செலவு செய்ய வேண்டியதில்லை. ஆயுத பூஜைக்கு
பொரி கொடுத்தாலே, ஒரு வருடத்துக்கு பேசுவார்கள். இதையெல்லாம் மீறி, சமூக ஊடகங்களிலோ,
யுட்யூப் சேனல்களிலோ அரசை விமர்சித்தால், கஞ்சா கேஸ் போட்டு, குண்டர் சட்டத்தில் அடைப்பார்கள்.
இதன் காரணமாகத்தான், தமிழகத்தில் ஒரே ஒரு ஊடகம் கூட சுதந்திரமாக, மனசாட்சியோடு, உண்மைகளை
பேசுவதில்லை. எதிர்க்கட்சிகளின் செய்திகளை வெளியிடுவதில்லை. மக்கள் போராட்டங்கள் மீது
வெளிச்சம் பாய்ச்சுவதில்லை. இப்படி ஊடகஙக்ளை மிரட்டி, உண்மையை இருட்டடிப்பு செய்தாலே,
மீண்டும் 2026ல் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று தானும் நம்பி, முதல்வரையும் நம்ப வைத்துக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால் 8 கோடி மக்களை முட்டாளாக்குவது அத்தனை எளிதா?’’ என்று கேள்வி
எழுப்பியிருக்கிறார்.
மாப்பிள்ளையின் பதிலடி எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.