Share via:
சசிகலா, ஓபிஎஸ், தினகரனுக்கே ஒற்றுமை இல்லையே. கேலி செய்யும் எடப்பாடி
நிர்வாகிகள்
அ.தி.மு.க.வை கைப்பற்றும் சசிகலாவின் கடைசி முயற்சியும் தோல்வியை
சந்தித்திருக்கிறது. ‘அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’ என்கிற பெயரில் தென்காசி, வாசுதேவநல்லூர்,
சங்கரன்கோவில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிகளில் தன் சுற்றுப்பயணத்தை முடித்திருக்கும்
சசிகலாவுக்கு எதிர்பார்த்த ரிசல்ட் எதுவும் கிடைக்கவில்லை.
அ.தி.மு.க தொண்டர்களைச் சந்திப்பதற்கான பிரமாண்டப் பயணம் என அவருடைய
ஆதரவாளர்கள் ஆனந்தப்பட்டாலும் பொதுமக்களும், கட்சிக்காரர்களும் அவரை சந்திக்கவே இல்லை.
பில்டப் செய்யப்பட்ட கூட்டம் மட்டுமே சசிகலாவை பின் தொடர்கிறது. ஆகவே, இனி சுற்றுப்பயணம்
மூலம் எதுவும் ஆகப்போவதில்லை என்று அப்செட் நிலைக்குப் போய்விட்டார் சசிகலா.
அதனால் இப்போது வேறு வழியே இல்லாமல் ஓபிஎஸ் அமைப்புக்கு தலைமை
தாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன்
கட்சியில் தனக்கு இடமில்லை என்பதால் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு பன்னீர் ஆதரவுடன்
களத்தில் இறங்க இருக்கிறார். இதற்கு பா.ஜ.க. ஆதரவு இருக்கும் என்று நம்புவதாலே இந்த
முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
இதை எதிர்பார்த்தே காத்திருக்கிறார் பன்னீர்செல்வம். சசிகலா வந்துவிட்டால்
செலவை அவர் பார்த்துக்கொள்வார் என்று நினைத்து அழைப்புக்குக் காத்திருக்கிறார். அதேநேரம்
பன்னீரின் பக்கம் இருக்கும் ஒன்றிரண்டு நிர்வாகிகள், இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள். சசி வந்துவிட்டால் அவரது ஆதரவாளர்களுக்கே கட்சிப் பதவி கிடைக்கும்,
தாங்கள் டம்மி ஆக்கப்படுவோம் என்று எதிர்க்கிறார்கள். இதனாலே இவர்கள் சந்திப்பு தள்ளிப்
போய்க்கொண்டே இருக்கிறது.
அதேநேரம், டிடிவி தினகரன் தனி ரூட்டில் பயணித்துவருகிறார். சசிகலாவை
அ.ம.மு.க.வில் சேர்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அமமுக சார்பில் நடைபெற்ற
ஆலோசனை கூட்டத்தின் பேசிய டிடிவி தினகரன், ’2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது
தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. சட்டப்பேரவை தேர்தலில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி அல்லது
போடியில் நான் போட்டியிடுவதாக வெளியாகும் தகவல் தவறானது.
அதிமுகவை பாஜக அழிக்கப் பார்க்கிறது என்பதெல்லாம் பொய். ஜெயலலிதாவின்
உண்மை தொண்டர்கள் டிடிவி.தினகரன் பின்னே அணி திரள்வார்கள் என்றுதான் அண்ணாமலை கூறினார்.
பழனிசாமி ஒரு சுயநலவாதி, பதவி வெறி கொண்டவர். துரோகசிந்தனை கொண்ட
அவர்தான் அதிமுக ஒன்றிணைய தடைக்கல்லாக இருக்கிறார். பொதுச் செயலாளராக அவர் இருக்கும்வரைஅதிமுக
ஒன்றிணைய வாய்ப்பில்லை. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற ஆசையில்தான்
சசிகலா சுற்றுப்பயணம் செய்கிறார்’’ என்று வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியிருக்கிறார்.
சசிகலா, பன்னீர், தினகரன் மூவரும் ஒன்று சேராத நிலையில், அ.தி.மு.க.வை
ஒருங்கிணைக்கப்போவதாக இவர்கள் சொல்வது வெட்கக்கேடு என்று கேலி செய்கிறார்கள் எடப்பாடியின்
நிர்வாகிகள்.