Share via:
தேர்தல் வருவதையொட்டி தினம் ஒரு கட்சி உருவாகிவருகிறது. சமீபத்தில்
பண்ருட்டி ராமச்சந்திரன், பெங்களூரு புகழேந்தி, ஆம்ஸ்ட்ராங் மனைவி ஆகியோர் கட்சி ஆரம்பித்தார்கள்.
அந்த வரிசையில் இன்று சசிகலாவும் தேர்தலுக்குப் புதிய கட்சியைத் தொடங்கிவிட்டார்.
ஏற்கெனவே சசிகலா வீட்டில் தினகரன், திவாகரன், சின்ன எம்.ஜி.ஆர்.
சுதாகரன் ஆகியோர் கட்சி தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் வரிசையில் இப்போது சசிகலா
இன்று அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்று ஒரு கட்சியைத்
தொடங்கியிருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில்
2016ம் ஆண்டு பதிவு செய்த அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற
கட்சியில், இன்று இணைந்துள்ள சசிகலா தென்னந்தோப்பு சின்னத்தில் தேர்தலை சந்திக்கப்
போவதாக அறிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மூலம் அரசியலுக்கு வந்தவர் என்றாலும் கட்சி பெயரில்
ஜெயலலிதா இல்லை என்பது ஆச்சர்யம். ராமதாஸுடன் கூட்டணி உண்டா என்ற கேள்விக்கு, ‘’சில
பேர் யாருமே கூட்டணிக்கு வேண்டாம் என்றும். முக்கியஸ்தர்கள் கட்சியில் வேண்டாம் என்று
தனியாக போவார்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. எங்களுடன் நிச்சயமாக எல்லோரும் கூட்டணியோடு
தான் தேர்தலை சந்திப்போம். கழக தொண்டர்கள் தலைவர் காலத்தில் இருந்தே வந்தவர்கள். எல்லோருக்கும்
பாதுகாப்பாகவும், தமிழக மக்களுக்கு பாதுகாப்பாகவும் நாங்கள் இருப்போம்…’’ என்று யாருக்கும்
புரியாத ஒரு பதிலை சொல்லியிருக்கிறார்.
டிடிவி தினகரனை சமாளிக்க முடியாத சசிகலாவால் தமிழக மக்களை மயக்க
முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
