News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

சிறைக்குப் போய்விட்டு வெளியே வந்த சசிகலா அதன் பிறகு சட்டமன்றம், உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அமைதி காத்தார். இந்த நிலையில் திடீரென போயஸ் கார்டனில், ‘நான் வெளியே வந்துட்டேன், இனிமேலும் பொறுத்துக்க முடியாது. 2026ல் ஆட்சியைப் பிடிக்கப் போகிறேன்’ என்று பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கொடுத்த வாக்குறுதியைக் காக்கவில்லை என்பதும் பா.ம.க.வுடன் ரகசியக் கூட்டணியுமே இந்த கொந்தளிப்புக்குக் காரணம் என்கிறார்கள்.

இத்தனை காலம் அமைதி காத்த சசிகலா செய்தியாளர்களிடம், ‘’கொடநாடு கொலை வழக்கினை வைத்து தி.மு.க. எடப்பாடி பழனிசாமியை மிரட்டி பணிய வைக்கிறது.  எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. தோல்விகளும், சரிவுகளுமே அதிமுகவின் அடையாளம் என சில சுயநலவாதிகள் மாற்றிவிட்டனர். எப்படிப்பட்ட இந்த இயக்கத்தை இந்த நிலைக்கு தள்ளிவிட்டனர். அதிமுகவில் நடக்கும் இந்த அவலங்களை நானும் இத்தனை காலம் பொறுமையாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் இனியும் அப்படி என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் பார்த்து வளர்ந்தவள் நான்

அதிமுகவில் என்றைக்கு ஜாதி இருந்தது கிடையாது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் ஜாதி பார்த்தவர்கள் கிடையாது. ஜெயலலிதா உயர் ஜாதியை சேர்ந்தவர். அவர் ஜாதி பார்த்திருந்தால் என்னிடம் பழகி இருக்கவே முடியாது. நானும் அப்படித்தான். எனக்கு குறிப்பிட்ட ஜாதி தான் சொந்தம் என்று கிடையாது. நான் அனைவருக்கும் பொதுவானவள். அதிமுகவல் மட்டும்தான் எந்த ஜாதியை சேர்ந்தவர்களும் எம்எல்ஏ, எம்.பி ஆக முடியும் என்ற நிலை இருந்தது

ஆனால், அதிமுகவில் ஜாதி பார்க்கப்படுகிறது என்பதை இப்போதுதான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன். ஒரு குறிப்பிட்ட ஜாதி என்று நினைத்து ஜாதி அரசியலுக்குள் போய் விடுகிறார்கள். அப்படி ஜாதி தான் முக்கியம் என்று நினைத்தால், ஜாதி அமைப்புகளையும், சங்கங்களையும் வைத்து நடத்தலாமே. எதற்காக அரசியல் கட்சியை நடத்த வேண்டும்? இது எம்ஜிஆர் தொடங்கிய இயக்கம். ஜெயலலிதா வளர்த்த இயக்கம். இந்த இயக்கத்தில் ஜாதி அரசியல் செய்வதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அதிமுக தொண்டர்களும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

நான் ஒருவேளை ஜாதி பார்த்திருந்தால், உங்களிடம் (எடப்பாடி பழனிசாமி) ஏன் முதல்வர் பதவியை கொடுத்துவிட்டு சிறை சென்றிருக்க வேண்டும்? நான் ஜாதி பார்ப்பவளாக இருந்திருந்தால் அப்படி செய்திருப்பேனா? நான் ஜாதி பார்த்தது கிடையாது. மேற்கு மாவட்ட மக்கள் அதிமுகவுக்கு தொடர்ந்து ஆதரவாக இருப்பவர்கள். அவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காகவே அவருக்கு முதல்வர் பதவியை கொடுத்தேன். 2026ல் நிச்சயம் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.  என சசிகலா கூறினார்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தோம். ‘’எடப்பாடியின் நெருங்கிய வட்டத்தில் திவாகரன் மட்டும் இருந்துவந்தார். அவரிடம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு சசிகலாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் நிச்சயம் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று உறுதி கொடுத்திருந்தாராம்.

எடப்பாடி பழனிசாமியை நம்ப வேண்டாம் என்று தினகரன் சொன்னதை சசிகலாவும் திவாகரனும் கேட்கவில்லை மிகுந்த நம்பிக்கையுடன் அமைதி காத்தனர்.

இந்த தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி தரப்பை தொடர்புகொண்ட நேரத்தில், ‘’2026 தேர்தலுக்குப் பிறகு பார்க்கலாம்’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். அதோடு பா.ம.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி 2026 தேர்தலுக்கு அச்சாரம் போட்டுவிட்டார். கொங்குவும் பா.ம.க.வும் சேர்ந்தால் எளிதாக வென்றுவிடலாம் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு.

முக்குலத்தோர் வாக்குகள் தேவையில்லை என்ற முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி வந்துவிட்டதால், கொதித்துப்போன திவாகரன் மாஜி டெல்டா அமைச்சர்களிடம் ரகசியப் பேச்சு தொடங்கியிருக்கிறார். இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, அந்த மாஜிக்களுக்கு போன் செய்து, ‘யாரும் திவாகரன், சசிகலாவிடம் பேசக்கூடாது’ என்று கட்டுப்பாடு போட்டுவிட்டாராம்.

எடப்பாடியை நம்பி ஏமாந்து போனதாக திவாகரன் சசிகலாவிடம் கண்ணீர் விட்டிருக்கிறார். இதனால் கடுப்பான காரணத்தால் திடீர் பிரஸ் மீட் வைத்து கொதித்திருக்கிறார். இனி, ஆள் பிடிக்கும் படலம் ஆரம்பமாகும் என்கிறார்கள். ஆனால், மாஜிக்கள் சசிகலா சொல்வதைக் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் நிஜம் என்கிறார்கள்.

அரசியல் கலாட்டா ஆரம்பம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link