Share via:
ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த சாம்சங் ஊழியர் போராட்டம் முதல்வர்
ஸ்டாலின் தலையிட்ட பிறகு அவசரம் அவசரமாக முடித்துவைக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தின்
போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி நிர்வாகம் செயல்படுவதாக சி.ஐ.டி.யூ. கொதிப்பு
காட்டியிருக்கிறது.
இது குறித்துப் பேசும் சி.ஐ.டி.யூ. சங்கத்தின் தலைவர் முத்துக்குமார்,
‘’கடந்த ஒரு வார காலமாக சாம்சங் நிர்வாகம் அனைத்து தொழிலாளர்களையும் முறையாக முழுமையாக
பணியில் அமர்த்துவதற்கு மாறாக 150 தொழிலாளிகளுக்கு ஒரு வாரத்திற்கு வகுப்பு என்கிற
முறையில் உற்பத்தியில் ஈடுபடுத்தாத ஒரு நடைமுறையை பின்பற்ற துவங்கியது. ஒவ்வொரு நாளும்
விளையாட்டு போன்ற நிகழ்வுகளுக்கு அப்பால் தொழிற்சங்கத்துக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்தும்
தொழில்முறை விரிவுரையாளர்களை வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன.
இவை முழுவதும் ஆரோக்கியமான செயலுக்கானதல்ல என்பதனை நிர்வாகம் உணரவில்லை
இருந்த போதிலும் சாம்சங் தொழிலாளர்கள் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்கள்.
நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட ஒர்க்ஸ் கமிட்டி உறுப்பினர்கள் அவர்கள் கமிட்டியில் இணையுமாறு
தொழிலாளிகளை கையெழுத்து வேட்டை நடத்த தொடங்கினார்கள் யாரும் அதற்கு சம்மதிக்கவில்லை
இருந்தபோதிலும் அமைதியாக ஒவ்வொரு நாளும் தொழிலாளர்கள் கடந்து சென்றாரகள்.
கடைசியாக இப்போது நிர்வாகமே நேரிடையாக அனைத்து அதிகாரிகளையும்
களத்தில் இறக்கிவிட்டு நிர்வாகத்துக்கு ஆதரவான கமிட்டியில் கையெழுத்து போடுமாறு மணிக்கணக்கில்
நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள். இது எல்லை கடந்த நிர்வாகம் செய்யக்கூடாத குற்றமாகும்.
இந்த தவறை ஏற்கனவே செய்ய முனைந்த போது தான் வேலை நிறுத்த போராட்டம் வெடித்தது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு முத்தரப்பு உடன்பாட்டின் அடிப்படையில்
வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தன. உற்பத்திக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தருவதற்கு
உள்ளே வந்த தொழிலாளிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தாமல் தொழிற்சங்கத்தை உடைக்கும் நடவடிக்கையில்
நிர்வாகம் ஈடுபடுவது விபரீத செயல் என்பதனை நிர்வாக அதிகாரிகள் உணர வேண்டும். இதற்கு
சிஐடியூ தொழிற்சங்கம் எதிர் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டி வரும் என்பதனை சாம்சங் நிர்வாகம்
புரிந்து கொள்ளட்டும்’’ என்று எச்சரிக்கை செய்கிறார்.
தீபாவளிக்குப் பிறகு மீண்டும் போராட்டம் ஆரம்பமாகும் என்கிறார்கள்.
பார்க்கலாம்.