திருவள்ளுவர் படத்துக்கு காவி ஆடை அணிவித்து நெற்றி, கைகளில் திருநீறு பட்டை போட்ட படத்தைப் போட்டு, ‘ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்…’ என்று ஆளுநர் ரவி வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார்.

ஏற்கெனவே திருவள்ளுவர் படத்துக்கு காவி உடை போட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமண மதத்தைச் சேர்ந்த திருவள்ளுவரை சனாதன துறவியாகக் காட்டுவது திட்டமிட்டு திணிப்பு வேலை என்று திராவிடக் கட்சியினரும் தமிழ் தேசியத்தினரும் கொதித்தெழுந்து திட்டி தீர்த்து வருகிறார்கள்.

அரசாணை எண் : GO. MS 1193 ; 23/06/1967 ன்படி அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படங்களே அரசு அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள ஹேண்டிலில் அரசாணையை மீறி வேறு படத்தை பதிவேற்றம் செய்திருப்பது விதிமீறல் என்று கவர்னருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்று கூறி ஆரிய பார்ப்பனீயத்தை செருப்பால் அடித்த வள்ளுவர் தினத்தை கொண்டாடுவோம்’ என்று வள்ளுவருக்கு கருப்பு ஆடை அணிவித்து பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இப்படியெல்லாம் திசை திரும்ப வேண்டும் என்றுதானே இந்த படத்தைப் போட்டிருக்கிறார். இதை கண்டுக்காம போங்கப்பா… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link