ஜாமீன் கொடுக்கப்பட்டதுமே செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது ஏன்.. இது சாட்சிகளை கலைக்கும் ஆபத்து இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்திருக்கும் நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து தூக்கவேண்டும் என்று அனைத்து எதிர்க் கட்சிகளும் குரல் கொடுக்கிறார்கள்.

சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இரண்டாம் நாளிலேயே செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக்கப்பட்டதற்காக தமிழக முதலமைச்சருக்கு  உச்சநீதிமன்றம்  கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ள செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும், அதுவே சரியான தீர்வு என்கிறார்கள் எதிர்க் கட்சிகள்.

 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை பெறுவதற்காக செந்தில்பாலாஜியிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் ஒருவரான வித்யாகுமார் என்பவர், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்கப்பட்டதை எதிர்த்தும், உடனடியாக பிணையை ரத்து செய்யக் கோரியும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”என்ன இது. செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் நேரடியாக அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். இது நிறுத்தப்பட வேண்டும். அவர் அமைச்சராக்கப்பட்டதால், வழக்கின் சாட்சிகள் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற பொதுமக்களின் அச்சம் நியாயமாக்கப்படும்” என்று தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற வழக்கறிஞர் சித்தார்த்தா லூத்ராவை நோக்கி வினா எழுப்பியுள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு செப்டம்பர் மாத இறுதியில் பிணை வழங்கப்பட்ட நிலையில், அடுத்த இரண்டாவது நாளே செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது மட்டும் சிக்கல் அல்ல. அதையும் தாண்டி செந்தில் பாலாஜியை தியாகி என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியிருந்தார். தமிழ்நாட்டில் மிக அதிக அதிகாரம் பெற்ற அமைச்சராக செந்தில் பாலாஜி திகழும் நிலையில், அவருக்கு எதிரான வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. செந்தில் பாலாஜிக்கு எதிரான சாட்சிகள் மிரட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எனவே செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது சரியானதாக இருக்காது. எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி,  செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் புகார் சொல்கிறார்கள்.

அதேநேரம் தி.மு.க.வினர், ‘’குற்றவாளி என்று தண்டனை அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா, மேல் முறையீட்டுக்குச் சென்றபோது முதல்வராக பதவி ஏற்றது குறித்து அத்தனை நீதிமன்றங்களும் கட்சியினரும் வாய் பொத்தி நின்றது ஏன்..? தமிழக மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு யாரை அமைச்சராக்க வேண்டும் என்பதற்கு உரிமை இருக்கிறது. அவருக்கு ஜாமீன் வழங்கிய நேரத்தில் அமைச்சர் பதவி வழங்கக்கூடாது என்றெல்லாம் சொல்லப்படவில்லை. எனவே, நீதிமன்றம் இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறார் ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link