Share via:
தமிழகத்தில் மொத்தம் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு ஊர்வலம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 33 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்காக மாநகர காவல் ஆணையர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
காவல்துறை சார்பில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இவ்வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
போதிய தகவல்களை குறிப்பிடவில்லை என்றும், தேவாலயம், மசூதி, திராவிடர் கழக அலுவலகம் இருக்கும் இடங்களில் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டுள்ளதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிபதி முன்பு தெரிவித்தார்.
மேலும் அணிவகுப்பு ஊர்வலம் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, சட்டம் ஒழுங்கை பராமரிப்பு மாநில அரசின் கடமை என்று கூறி வழக்கை மறுவிசாரணைக்கு ஒத்தி வைத்தது.
அதன்படி இவ்வழக்கின் மீதான விசாரணை இன்று மீண்டும் வந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருகிற 22 மற்றும் 29ம் தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதிப்பதாகவும், அதற்கு உரிய பாதுகாப்பை காவல்துறைதான் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ஊர்வலத்தில் சீருடை அணியாத யாரையும் அனுமதிக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை பின்பற்ற போலீசார், அந்த அமைப்புக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதோடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை அழைத்து நிபந்தனைகளுடன் ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார். 22ம் தேதி ஊர்வலத்திற்கான வழித்தடத்தை 2 நாட்களுக்கு முன்னதாவே அதாவது 20ம் தேதியே திட்டமிட வேண்டும் என்றும், 29ம் தேதிக்கான ஊர்வல வழித்தடத்தை வருகிற 24ம் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.