Share via:
தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருகட்களை கடத்திய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பதற்காக எடுக்கப்படும் இந்த சோதனை நடவடிக்கைகளில் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்குகின்றன.
அந்த வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு மெத்தா பெட்டமைன் எனப்படும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சென்னையைச் சேர்ந்த மன்சூர், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பைசூல் ரகுமான், இப்ராகிம் உள்ளிட்ட 3 பேரிடம் சோதனை மேற்கொண்டனர். அவர்களிடம் இருந்து 70 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தா பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சென்னையைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் தி.மு.க. பிரமுகர் என்று தெரியவந்துள்ளது. இவர் கட்சியில் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.
இவர் ஏற்கனவே 2 முறை போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தப்படும் போதைப் பொருட்களை பேருந்து மற்றும் கார்களில் ராமநாதபுரத்திற்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கிருந்து கடல் மார்க்கமாக படகில் இலங்கைக்கு கடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே தி.மு.க.வில் இருந்த ஜாபர் சாதிக், போதைப்பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரிடம் இருந்து இதே மாதிரியான மெத்தா பெட்டமைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. பிரமுகர்கள் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படும் சம்பவம் எதிர்க்கட்சியினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கைது செய்யப்பட்ட இப்ராகிமுக்கும், ஜாபர் சாதிக்கிற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.