றெக்கை கட்டி பறக்குதய்யா ஸ்டாலினோட ராக்கெட்

 

சினிமாவில் சைலன்ட் வில்லன் என்று சிலரைக் காட்டுவார்கள். அதாவது, கடைசி காட்சி வரையிலும் அவர் நல்லவர் போலவே காட்சிப்படுத்தப்படுவார். இறுதியில் தான் அவரே எல்லா சிக்கலுக்கும் காரணம், அவரே வில்லன் என்று காட்டுவார்கள்.

அரசியலில் அப்படியெல்லாம் கிளைமாக்ஸ் காட்சி வரை காத்திருக்கத் தேவையே இல்லை. வில்லனும் நானே கதாநாயகனும் நானே என்று ஒரே நேரத்தில் இரண்டு வேடம் போடுகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

மதுவிலக்கு வேண்டும் என்பது தான் எங்களுக்கும் கொள்கை, டாஸ்மாக் கடைகளைக் குறைப்போம் என்கிறார். அதோடு, ‘என் பிள்ளைகளே போதையைத் தேர்வு செய்யாதீர்கள். ஒரு தந்தையாகக் கேட்கிறேன்’ என்று மன்றாடி வீடியோ போடுகிறார்.

அதேநேரம், தமிழக அரசை நடத்துவதற்கு மதுவும் அதன் பணமும் வேண்டும் என்பதிலும் குறியாக இருக்கிறார். அதனால் அதிக கலெக்‌ஷன் ஆகும் டாஸ்மாக் பார்களில் எல்லாம் கவுண்டர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறார். அதாவது குடி பிரியர்கள் வரிசையில் கால் வலிக்க நிற்கக்கூடாது என்று நினைக்கிறார். 

டாஸ்மாக் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்பதால் மனமகிழ் மன்றங்களுக்கு மது விற்பனை செய்வதற்கு அனுமதி கொடுக்கிறார். கடந்த தீபாவளியை விட 20 சதவீதம் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதால், எந்த பிராண்ட் சரக்கும் இல்லை என்ற நிலை இருக்கக்கூடாது என்று கூடுதல் ஸ்டாக் வைக்கச் சொல்கிறார்.

ஒவ்வொரு குவார்ட்டருக்கும் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வது, அதிகாலை முதல் நள்ளிரவு வரை கள்ள மார்க்கெட் விற்பனை என்று டாஸ்மாக்கில் நடக்கும் அத்தனை கூத்துக்களையும் கண்டும் காணாமலும் நல்லவர் போன்று நாடகம் போவது தான் திராவிட மாடலா முதல்வரே..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link