Share via:
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று
முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் நேற்றைய தினமே
தமிழ்நாடு பட்ஜெட்டிற்கான முத்திரை சின்னத்தை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில்,
“தடைகளை தாண்டி.. வளர்ச்சியை நோக்கி” என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
அதோடு, ‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’ என்று சமூக நீதி, கடைக்கோடி
மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ
நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய் தமிழும் தமிழர் பண்பாடும் என்கிற 7 தலைப்புகளை
வெளியிட்டிருந்தது.
அதன்படி இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல்
செய்து உரையாற்றினார். அவர் பேசுகையில், ” இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார
கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட், தமிழர்களை தலைநிமிர
செய்தது. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை
வழிநடத்திட வேண்டிய சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆழி சூழ் தமிழ் நில பரப்பில்
அழையா விருந்தாளியாக அவ்வப்போது வரும் இயற்கை பேரிடர்கள் ஒரு பக்கம். கூட்டாட்சி தத்துவத்தை
அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபக்கம்.
இதற்கிடையே, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவு திட்டத்தை
உருவாக்கிட வேண்டிய தேவைகள் எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல்
மட்டுமே எங்களுக்கு கலங்கரை விளக்கமாக எங்களுக்கு அமைந்துள்ளன’ என்று குறிப்பிட்டார்.
பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களாக கிராமப்புற சாலைகளுக்கு
1000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி
நிதி ஒதுக்கீடுயும், 5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடும்
செய்யப்பட்டுள்ளது.
2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி
நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம்
செய்யப்படுகிறது.
நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும்
2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும்
வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து
வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
>கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு.
2030க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50
லட்சம் ஒதுக்கப்படும். சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு. சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த
ரூ.100 கோடி ஒதுக்கீடு. வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி
ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
சிலப்பதிகாரம்,
மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும். தமிழ் மொழியை
நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும். ரூ.65 லட்சம் செலவில் அழகன்
குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும். கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை
உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும். கீழடியில் திறந்தவெளி அரங்கு
ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும். சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில்
நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதியில் அரசு உதவி பெறும்
பள்ளி மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி
பெறும் மாணவிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பூந்தமல்லியில் திரைப்பட நகரத்துக்கு 500 கோடி ரூபாய்
ஒதுக்கீடு. சென்னை தீவுத் திடல் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வசதி மேம்பாடு, ஏரி, குளம் புனரமைப்பு, நீர்த்தேக்கத் தொட்டிகள்
போன்றவை காரணமாக மக்களுக்குத் தேவையானதை செய்துகொடுத்து ஓட்டு வாங்கும் பட்ஜெட் என்றே
கருதப்படுகிறது.