Share via:
துணை முதல்வர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகு அவரது பிறந்த
நாள் வரும் 27ம் தேதி பிரமாண்டமாகக் கொண்டாடுவதற்கு கழக உடன்பிறப்புகள் போட்டி போட்டுக்கொண்டு
தயாராகி வருகிறார்கள். இந்த ஆடம்பரம் எங்கே போய் விடுமோ என்று பயந்து போய் இன்று அறிக்கை
விட்டுள்ளார்.
இன்று உதயநிதி அறிக்கையில், ‘’என் பிறந்தநாளை முன்னிட்டு, கழகத்
தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி
வருகிறீர்கள். இந்தப் பேரன்பு தொடர்ந்து செயல்படுவதற்கான உற்சாகத்தை, ஊக்கத்தை எனக்குத்
தருகிறது . உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவிக்கும் இவ்வேளையில்,
என்னுடைய இந்தப் பிறந்தநாள் வேண்டுகோளையும் நினைவில்கொள்ளுமாறு, உங்கள் அனைவரையும்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என் பிறந்தநாளை முன்னிட்டு, ஃபிளெக்ஸ் பேனர்கள் வைப்பதையும் சுற்றுச்சூழலுக்கு
மாசு ஏற்படுத்தும் வகையில் பட்டாசுகள் வெடிப்பதையும் கழகத்தோழர்கள் முற்றிலும் தவிர்க்கவேண்டும்
என்று, உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். அவற்றைத் தவிர்த்துவிட்டு, மேற்கண்ட ஆக்கபூர்வமான
செயற்பாடுகளில் கழகத்தினர் கவனம் செலுத்துவதே எனக்கு மகிழ்ச்சியளிக்கும்.
எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கவே, விழி பிதுங்கிக்கொண்டிருக்கும்போது
நாம் 2026-சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். 2026-இல் வெற்றிபெற்று
கழகத்தலைவர் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு மீண்டும் அமைவதற்கான உறுதியை
இந்தப் பிறந்தநாளில் என்னுடன் சேர்ந்து கழகத்தோழர்களும் ஏற்றுக்கொள்ளுங்கள்..’’ என்று
தடை போட்டிருக்கிறார்.
இந்த விஷயத்தில் தலைவரே சொன்னாலும் கேட்க மாட்டோம் என்று உதயநிதி
ஆதரவாளர்கள், சென்னையைக் கலக்க தயாராகி வருகிறார்கள். எத்தனை அமைச்சர்கள் காலில் விழுகிறார்கள்
என்று பார்க்கலாம்.