Share via:
வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து டாக்டர்
ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் கடுமையான கருத்துவேறுபாடு நிலவுகிறது. இந்த நிலையில்,
’பாமக தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன். அன்புமணியை செயல்தலைவராக நியமனம்
செய்கிறேன்’ என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ்,
“ராமதாஸ் எனும் நான் நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன்.
அன்புமணியை செயல்தலைவராக நியமனம் செய்கிறேன். இன்னும் சில தினங்களில் நடக்கவுள்ள பாமக
மாநாடு பணிகளை கவனித்து வரும் அன்புமணிக்கு கட்சித் தொண்டர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’
என்று கூறியிருக்கிறார்.
பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அன்புமணிக்கு உதவ முகுந்தனை
இளைஞர் அணி தலைவராக டாக்டர் ராமதாஸ் நியமனம் செய்வதாக அறிவித்தார். அப்போது அருகில்
இருந்த அன்புமணி குறுக்கிட்டு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து மேடையிலே டாக்டர் ராமதாஸ்க்கும்
அன்புமணிக்கும் நேரடியாகவே மோதல் நடந்தது.
தற்போது பா.ஜ.க. கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்று அன்புமணி
ஆசைப்படுகிறார். ஆனால், அ.தி.மு.க. கூட்டணியே ராமதாஸ் விருப்பமாக இருக்கிறது. சென்னை
வரும் அமித்ஷாவை அன்புமணி சந்திக்கும் திட்டம் இருப்பதாகத் தெரியவரவே, அதை முறியடிக்கவே
இந்த முடிவை ராமதாஸ் அறிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. வக்பு வாரியத் தீர்மானத்தில்
அ.தி.மு.க.வினர் எதிர்த்து வாக்களித்த நிலையில் அன்புமணி வாக்கெடுப்பில் பங்கெடுப்பாமல்
வெளியேறினார். இதையடுத்தே இந்த விஷயம் சூடு பிடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையும் தாண்டி அமித்ஷாவை சந்திப்பாரா அன்புமணி..? நீயா நீனா போட்டியில்
ஜெயிக்கப்போவது யார் என்று பார்க்கலாம்.