Share via:
வன்னியர் சங்கத்
தலைவர் கழுத்தை அறுப்பேன் என கூறி கொலை மிரட்டல் விடுத்த விசிக பெண் ரவுடியை கைது செய்ய
வேண்டும் என்று கடலூர் மாவட்டம் முழுக்க பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து
கொலை மிரட்டல் விடுத்த செல்வராணியை 1 வது குற்றவாளியாக முதல் தகவல் அறிக்கையில் சேர்த்து
கடலூர் மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளனர்.
இது தவிர, 2 வது
குற்றவாளியாக அறிவுடைநம்பி சேர்த்துள்ளனர், 3 வது குற்றவாளியாகவும், கடலூர் மாநகர துணை
மேயர் தாமரைச்செல்வன் 4 வது குற்றவாளியாக நீதிவள்ளல் 5 வது குற்றவாளியாக க அரங்க. தமிழ்ஒளி
6 வது குற்றவாளியாக க.செல்லப்பன் சேர்த்துள்ளனர். இது மட்டுமின்றி பாமக மாவட்டச் செயலாளர்..
செல்வமகேஷ் மற்றும் 9 வன்னியர்கள் மீதும வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கு பா.ம.க.வினர்
கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். இன்று ராமதாஸ், ’’பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
கூற சென்றோர் மீது வன்கொடுமை வழக்கா? காவல்துறையின் ஈரல் மட்டுமின்றி, இதயம், மூளையும்
100% அழுகி விட்டதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அதோடு, ’வன்னியர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விடும் கும்பலை வன்னியர்
வன்ம மனநிலையுடன் ஆதரித்துக் கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாட்டாளி மக்கள் கட்சியினர்
மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்’’ என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
நடந்த சம்பவம் குறித்துப்
பேசும் வன்னியர்கள், ‘’கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தில்
அரசியல் கட்சிக் கொடிகளால் சச்சரவுகள் ஏற்படுவதாகக் கூறி, அந்த ஊரில் உள்ள அனைத்து
கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில், ஊர் பொது
மக்கள் மனு அளித்துள்ளனர் (ஊராட்சி மன்றத் தலைவர் த.வா.க கட்சியை சேர்ந்தவர்). தாசில்தார்
தலைமையிலான அமைதி கூட்டங்களில் எல்லா கட்சிகளின் கொடிக் கம்பங்களும் நீக்கப்பட வேண்டும்
என பேசப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் முடிந்த பின்னர் எந்த கொடிக் கம்பத்திலும்
கொடி ஏற்றப்படவில்லை. விசிக கம்பத்தில் மட்டும் மாவட்டச் செயலாளரை வைத்து கொடி ஏற்றியுள்ளனர்.
மஞ்சக்கொல்லை கிராமத்தைச்
சேர்ந்த பாமக தொண்டர் செல்லத்துரை சில நாட்களுக்கு முன்பு பு.உடையூர் என்ற கிராமத்தின்
வழியாக சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு விசிகவைச் சேர்ந்த சிலர் வழியில்
அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். வழியை விட்டு ஒதுங்கி நின்று மது அருந்தும்படி
செல்லத்துரை கூறியதால் ஆத்திரம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்த கும்பல்,
கட்டைகளாலும், இரும்பு கம்பியாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கினர்.
இதனால் காயமடைந்து, ரத்தம் வழியும் நிலையில் செல்லத்துரை மயங்கி விழுந்தார். கொலைவெறி
கும்பலைச் சேர்ந்தவர்கள், செல்லத்துரையின் சட்டையில் உள்ள வன்னியர் சமுதாய சின்னத்தை
மிதித்தும், அவதூறாக பேசியும் இழிவுபடுத்தி, அதனை காணொலியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில்
பதிவிட்டனர்.
பாமக தொண்டர் செல்லத்துரை
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது சொந்த ஊருக்கு சென்ற வன்னியர்
சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியும், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷும் செல்லத்துரையின்
குடும்பம் மற்றும் ஊர்மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு
ஆறுதல் கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புவனகிரியில்
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டத்தைக் கூட்டி வன்னிய மக்களை இழிவு படுத்தும் வகையில்
பேசினர். வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களின் தலையை வெட்டி எடுப்போம்
என்று மிரட்டல் விடுத்தனர். அதுமட்டுமின்றி, ‘‘தமிழ்நாட்டில் இப்போது நடப்பது திருமா
காலம். இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக் கொண்டு தான் இருப்போம்.
அவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும்’’ என்று கொக்கரித்தனர்.
இதற்கான போராட்டத்தில்
உண்மையான குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டாலும், போராட்டத்தைத் தூண்டிய விசிக பிரமுகர்கள்
கைது செய்யப்படவில்லை. அதோடு தேவையின்றி பா.ம.க.வினரையும் கைது செய்திருக்கிறார்கள்.
இதற்கான விளைவுகளை தி.முக. தேர்தலில் சந்திக்கும்’ என்கிறார்கள்.
அதேநேரம் விடுதலை
சிறுத்தைகள் அமைப்பினர், ‘’ஒரு சாதாரண பிரச்னையை பெரிதாக்கி அரசியல் லாபம் அடையப் பார்க்கிறார்
டாக்டர் ராமதாஸ். பட்டியலின மக்கள் நான்கு பேர் ஒன்று சேர்ந்தாலே கைது செய்துவிடும்
தி.மு.க. அரசு கூட்டம் கூட்டமாக போராடும் பா.ம.க.வினருக்குப் பாதுகாப்பு கொடுக்கிறது’’
என்று கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இப்போதைக்கு போராட்டம்
சூடு தணிந்திருந்தாலும் எந்த நேரமும் வெடிக்கலாம் என்பதே கடலூர் நிலவரம்.