Share via:

பாமக வன்னியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில்
நடைபெற்ற சித்திரை முழுநிலவு மாநாட்டில் கட்சியினருக்கு எச்சரிக்கை என்ற பேரில் அன்புமணிக்கு
ராமதாஸ் எச்சரிக்கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல் ஐ.ஏ.எஸ். நியமனம் பற்றி அன்புமணி
பேசியிருப்பது அவரது கட்சியினரையே கிறுகிறுக்க வைத்திருக்கிறது.
இந்த மாநாட்டில் பேசிய ராமதாஸ், ‘’10.5 சதவிவித இடஒதுக்கீடு குறித்து
பேசிக்கொண்டு இருக்கிறோமே தவிர அவர்கள் கொடுப்பதாக இல்லை. 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்காக
பாமக சார்பில் நிச்சயம் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்திற்காக
நான் எவ்வளவு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். என்னுடைய வாழ்வில் எத்தனையோ
போராட்டங்களை சந்தித்து இருக்கிறேன். தொடர்ந்து உங்களுக்காக உழைத்து வருகிறேன்.
நான் ஆளப்போவதில்லை, எனக்கு அந்த ஆசையும் இல்லை. அந்த ஆசை இருந்திருந்தால்
இந்தியாவிலே கவர்னராக, அமைச்சராக இருந்திருப்பேன். இந்தியாவில் என்னைப் போல் போராடியவர்கள்
யாராவது இருக்கிறார்களா? தமிழ்நாட்டில் என் கால் படாத கிராமங்களே இல்லை என்ற அளவில்
உழைத்தேன். உங்களுக்காகவே வாழ்கிறேன். தமிழக முதல்வர் தம்பி ஸ்டாலினிடம், வன்னிய சமூகத்திற்கு
உங்களை விட்டால் யாரும் இல்லை என்று இட ஒதுக்கீடு கோரிக்கைகளை முன் வைத்தேன்.
அதனால் தான் நீங்கள் அனைவரும் உழைக்க தயாராக இருக்க வேண்டும்.
நாங்கள் உழைக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் செலுத்த வேண்டியது ஒரே ஒரு ஓட்டு
தான். தனியாக போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்ற நாம், கூட்டணியில் 5 இடங்களில் வெற்றி
பெற்றது அசிங்கமாக இல்லையா? கட்சி நிர்வாகிகள்
ஒழுங்காக வேலை செய்யாவிட்டால் கணக்கை முடித்து விடுவேன். அதாவது பொறுப்புகளை வேறு ஒரு
திறமைமிக்க இளைஞரிடம் ஒப்படைத்துவிடுவேன். எம்எல்ஏக்கள் சரியாக செயல்படவில்லை என்றால்
கடலில் தூக்கி வீசிவிடுவேன்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ‘’அந்த கூட்டணி, இந்த கூட்டணி, கட்சிக்குள்ளயே கூட்டணி..
அந்த கோஷ்டி, இந்த கோஷ்டி என்பதெல்லாம் இதெல்லாம் நடக்காது கண்ணு. நீ உன்னை திருத்திக்கொள்..
இல்லையென்று சொன்னால்.., நீ இந்த கட்சியின் பொறுப்பில் இருக்கவே முடியாது’’ என்று கொடுத்த
எச்சரிக்கை அன்புமணிக்கு நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, ‘’தமிழ்நாட்டில் 120 IPS
326 IAS அதிகாரிகள் இருக்கிறார்கள்! அதில் ஒரே ஒரு IPS அதிகாரியும் 14 IAS அதிகாரிகளும்தான்
வன்னியர்கள் இருக்கிறார்கள்! இந்த அநீதியை தமிழ்நாடரசு நமக்கு செய்கிறது’’ என்று கொதித்தார்.
அன்புமணி நிஜமாக படித்து பாஸ் ஆகித்தான் வந்தாரா..? IAS,IPS படித்து
அதிகாரி ஆவதற்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று அவரது கட்சியினருக்கே தலை
சுற்றிவிட்டது. அன்புமணியின் ஆதரவாளர் திலகபாமாவுக்கு மேடையில் இடம் கொடுக்காமல் கீழே
அமர வைத்து, கட்சி இன்னமும் தன் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று காட்டியிருக்கிறார்
ராமதாஸ்.