Share via:
அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் தோற்றுப்போன சசிகலாவும், பாமகவை
கைப்பற்றும் முயற்சியில் தோற்றுப்போன ராமதாஸும் சந்தித்துப் பேசியிருப்பது அதிமுக வட்டாரத்தை
அதிரவைத்துள்ளது.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்தார்.
அதன் அடையாளமாக, கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளன்று பசும்பொன்னில் நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில் தனது புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். இதன் பிறகு அதிமுக அல்லது
பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்த்தார், ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதேபோல் திமுக கூட்டணியில் தனக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று
ராமதாஸ் காத்திருந்தார். சின்னம் இல்லை என்பதால் அங்கேயும் மதிப்பு இல்லை. எனவே, இரண்டு
பேரும் அரசியலில் அனாதையாகவே மாறிப்போனார்.
இந்த நிலையில் இந்த இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவெடுப்பார்கள்
என்று சொல்லப்பட்டு வந்தது. அதனை உண்மையாக்கும் வகையில் நேற்றைய தினம் தைலாபுரம் இல்லத்திற்கு
வி.கே. சசிகலா நேரில் சென்று ராமதாஸைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சுமார்
அரை மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
தென் தமிழகத்தில் சசிகலாவுக்கும் வட தமிழகத்தில் ராமதாஸ்க்கும்
ஆதரவு உள்ளது. ஆகவே, இவர்கள் ஒன்றிணைந்து 100 தொகுதிகளில் மட்டும் போட்டியிடுவார்கள்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி போட்டியிட்டால் இந்த இடங்களில் எல்லாம் அதிமுக
கூட்டணி வாக்குகள் மட்டுமே பாதிக்கப்படும் என்பதால் திமுக இந்த கூட்டணிக்கு ஆர்வத்துடன்
காத்திருக்கிறது.
