Share via:
தேர்தல் நெருங்கும்
நேரத்தில் எல்லாம் ஏதாவது போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டு மஞ்சள் படைக்கு உற்சாகம்
கொடுப்பது டாக்டர் ராமதாஸ் பழக்கம். அந்த வகையில் இப்போது, ’’வன்னியர் சங்கத் தலைவரின்
தலையை வெட்டுவோம் என கொக்கரிக்கும் கும்பலை காவல்துறை வேடிக்கை பார்ப்பதா? உடனே குண்டர்
சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!” என்று
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை விட்டதையடுத்து கடலூர் மாவட்டம் செம ஹாட்
ஆக மாறியிருக்கிறது.
இது குறித்து ராமதாஸ்
ஆதரவாளர்கள், ‘’கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த
செல்லத்துரை என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் சில நாட்களுக்கு முன்பு தமது சகோதரியின்
திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுத்து விட்டு, பு.உடையூர் என்ற கிராமத்தின் வழியாக
சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த
சிலர் வழியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
வழியை விட்டு ஒதுங்கி
நின்று மது அருந்தும்படி செல்லத்துரை கூறியதால் ஆத்திரம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர்
அடங்கிய அந்த கும்பல், கட்டைகளாலும், மதுபாட்டில்களாலும் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
அந்த கும்பலின் கொலைவெறித் தாக்குதலில் தலை, முகம், உடல் என அனைத்து இடங்களிலும் காயமடைந்து,
ரத்தம் வழியும் நிலையில் செல்லத்துரை மயங்கி விழுந்துள்ளார். அப்போதும் கொலைவெறி அடங்காத
கும்பல், அவரை கால்களால் எட்டி உதைத்தும், அவரது சட்டையில் உள்ள வன்னியர் சாதி சின்னத்தை
மிதித்தும், அவதூறாக பேசியும் இழிவுபடுத்தியுள்ளனர்.
செல்லத்துரை மீது
கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டிய காவல்துறை,
அவர்கள் மீது மிகவும் சாதாரணமான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து பாதுகாக்க முயல்கிறது.
செல்லத்துரை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவரது சொந்த ஊருக்கு சென்ற
வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியும், பா.ம.க. மாவட்ட செயலாளர் செல்வமகேஷும்
செல்லத்துரையின் குடும்பம் மற்றும் ஊர்மக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு
ஆறுதல் கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், புவனகிரியில்
ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் கூட்டத்தைக் கூட்டி வன்னிய மக்களையும் இழிவு படுத்தும் வகையில்
பேசியுள்ளனர். வன்னியர் சங்கத்தின் தலைவர் பு.தா. அருள்மொழி அவர்களின் தலையை வெட்டி
எடுப்போம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, ‘‘தமிழ்நாட்டில் இப்போது
நடப்பது திருமா காலம். இன்னும் 42 ஆண்டுகளுக்கு வன்னியர்களை நாங்கள் அடித்துக் கொண்டு
தான் இருப்போம். அவர்கள் வாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும்’’ என்று கொக்கரித்திருக்கின்றனர்.
மஞ்சக்கொல்லை செல்லத்துரையை
கொடூரமாக தாக்கிய கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி
வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியின் தலையை
வெட்டுவோம் என்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் உரிய சட்டப்பிரிவுகளில்
கைது செய்வது மட்டுமின்றி, பொது அமைதியை குலைக்க முயன்றதற்காக அவர்களை குண்டர் சட்டத்தில்
சிறையில் அடைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான போராட்டங்களை
பா.ம.க. முன்னெடுக்கும்’’ என்று கூறி காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
ஆனால் விடுதலை சிறுத்தைகளோ,
‘’நாங்கள் பேசாததை எல்லாம் பேசியதாகச் சொல்கிறார்கள். வம்பிழுத்து ஜாதி மோதலை உருவாக்க
நினைக்கிறார்கள்’ என்று கொதிக்கிறார்கள்.
காவல் துறை எச்சரிக்கையாக
இருக்க வேண்டும்.